மாயன் நாகரீகத்தில்..

2000 வருடங்களுக்கு முன்னர் அழிந்து போனதாக சொல்லப்படும் மாயன் நாகரீகத்தின் எச்சங்களை தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு உலக அளவில் தற்போது கவனம் பெற்று வருகிறது.

மாயன் நாகரீகம் என்றவுடன் பலருக்கும் மாயன் காலண்டர் ஞாபகம் தான் வரும். அந்த நாட்காட்டியின்படி கடந்த 2012 ஆம் ஆண்டு உலகம் அழியும் என தகவல்கள் பரவியது.

உலகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் இவை வதந்திகளே என ஆய்வாளர்கள் ஆணித்தரமாக கூறிவந்தனர். ஆனாலும், மாயன் நாகரீகம் உண்மையில் இருந்திருக்கின்றது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

மத்திய அமெரிக்காவில் வசித்து வந்ததாக சொல்லப்படும் மாயன்கள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதாக கருதப்படும் மாயன்கள் குறித்தும் அவர்களது நாகரீகம் குறித்தும் தற்போது புதிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

அதாவது, கவுதமாலா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்கு கீழே மாயன் நாகரீகத்தை சேர்ந்த கட்டிடங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

மெக்சிகோ எல்லைக்கு அருகில் உள்ள 650 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இப்பகுதி மிராடோர்-கலக்முல் கார்ஸ்ட் பேசின் என அழைக்கப்படுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நகரம், 110 மைல் நீளமுள்ள தரைப்பாதைகளால் இணைக்கப்பட்ட சுமார் 1,000 குடியிருப்புகளால் ஆனது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

பல அமெரிக்க பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் பிரான்ஸ் மற்றும் கவுதமாலாவை சேர்ந்த பணியாளர்களால் LiDAR தொழில்நுட்பம் மூலமாக இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

Ancient Mesoamerica எனும் இதழில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் தரவுகள் சமூக-பொருளாதார அமைப்பு மற்றும் மாயன்களின் உள்கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் சில குடியிருப்புகளில் பெரிய தளங்கள் மற்றும் பிரமிடுகள் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் அவை விளையாட்டு மற்றும் அரசியல் தொடர்பானவையாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, வறண்ட காலங்களில் தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் கால்வாய்கள் வெட்டப்பட்டதற்கான ஆதாரங்களும் இங்கே கிடைத்திருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.





