யாழில் வாய்த் தர்க்கம் முற்றியதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்!!

705

யாழில்..

இளைஞர்களிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் இளவாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதோடு புஸ்பராசா நிஷாந்தன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுண்டல் விற்பனை செய்துவிட்டு இளைஞர்கள் இருவர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த நபரொருவர் மேற்படி இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதையடுத்து மதுபோதையில் வந்தவர் மீது கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன்பின் அவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.