இருந்துவிட்டார் என இறுதிச் சடங்கு செய்த குடும்பம் : மீண்டும் உயிருடன் வந்த ஆச்சர்யம்!!

244

கேரளாவில்..

கேரளாவின் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி காணாமல் போயிருக்கிறார். குடும்பத்தினர் தீபக்கை தேடி அலைந்தபோதும் அவர் கிடைக்காததால் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். அந்த சூழ்நிலையில் ஜூலை 17ஆம் தேதி கடற்கரையில் ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அது தீபத்தின் உடலாக இருக்கலாம் என கருதிய போலீசார் உறவினர்களை அழைத்துச் சென்று விபரத்தை கூறியுள்ளனர்.

அப்போது உறவினர்களும் அது தீபக்கின் உடல் தான் என சொல்லவே உடல் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கும் நடைபெற்றது.

ஆனால் அதன் பிறகு பந்திரிக்காரா பகுதியைச் சேர்ந்த இர்ஷத் எனும் இளைஞர் காணாமல் போன வழக்கை காவல்துறையினர் விசாரிக்கவே இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட, கடற்கரையில் கிடைத்தது இர்ஷத்தின் உடல் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து காணாமல் போன தீபக்கை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கினர். பின்னர், இந்த வழக்கு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கோவாவில் உள்ள மார்கா பகுதியில் போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தீபக் பணிபுரிவதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். முன்னரே கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் அளித்திருந்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹோட்டலில் வேலை பார்த்த முன் அனுபவம் இருந்ததால் கோவா சென்ற தீபக் அங்கே பணியாற்ற துவங்கியதாகவும், கோவா வருவதற்கு முன்பாக அவர் ஜெய்ப்பூர், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கும் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து அவர் கேரள காவல் துறை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

விசாரணையின் போது தன்னிடத்தில் மொபைல் போன் இல்லாததால் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தனது குடும்பம் இறுதி சடங்கு செய்த விஷயமே தனக்குத் தெரியாது எனவும் தீபக் கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

எட்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நபர் முதலில் இறந்து போனதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.