நாய்க்கு வளைகாப்பு… 9 வகையான சாப்பாடுடன் விருந்து.. மொய்ப்பணம் வைத்து வாழ்த்திய உறவினர்கள்!!

322

நாமக்கல்லில்..

நாமக்கல் அருகே தங்களது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட செய்திருக்கிறார்கள் ஒரு தம்பதியர். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பொதுவாக பலருக்கும் செல்லப் பிராணிகளை வளர்ப்பது பிடித்திருக்கும். அந்த வகையில் பலரும் நாய், பூனை உள்ளிட்டவற்றை தங்களது வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

இந்த பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே மனிதர்களிடத்தில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான இணைப்பு மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். தங்களது வீட்டில் வளரும் நாயை குடும்பத்தில் ஒருவராகவே சிலர் கருதுவதும் உண்டு.

அப்படியானவர் தான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ். 35 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி.

இவர்கள் தங்களது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நாயை வளர்த்து வருகின்றனர். ஆண் நாய்க்கு பைரவன் எனவும் பெண் நாய்க்கு பைரவி எனவும் இந்த தம்பதி பெயர்சூட்டியிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பைரவி கர்ப்பம் தரித்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த ரமேஷ் – தேன்மொழி தம்பதி அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து பைரவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விழாவிற்கு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ரமேஷ்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பைரவிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. அப்போது புத்தாடை, வளையில், சந்தனம், குங்குமம் ஆகியவை பைரவிக்கு அணிவிக்கப்பட்டு ஒன்பது வகையான உணவுகளை தலைவாழை இலையில் பைரவிக்கு அளித்திருக்கின்றனர்.

மேலும் இந்த விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் மலர் தூவி பைரவியை வாழ்த்தி இருக்கின்றனர். அத்துடன் உறவினர்கள் மொய் செலுத்தி தங்களது அன்பை பரிமாறி இருக்கின்றனர். தங்களது வளர்ப்பு நாய்க்கு தம்பதியர் ஒருவர் வளைகாப்பு நடத்திய நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.