‘என் அம்மாவை கண்டுபிடிச்சு தாங்க..’ கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கன்றுக்குட்டி..!

488

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர், பசுமாடு, கன்றுக்குட்டியை தனக்கு சொந்தமாக உலகலாம்பூண்டி கிராமத்திலுள்ள மாட்டு கொட்டகையில் மாலை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு மீண்டும் மாட்டு கொட்டகைக்கு சென்ற போது மாட்டுக்கொட்டகையில் இருந்த பசு காணாமல் போய் இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் கன்றுக்குட்டி நின்றுள்ளது.

இதனையடுத்து எங்கு தேடியும் பசுமாட்டை காணவில்லை. பின்னர் பசுவை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் கோவிந்தன் கடந்த 19ம் தேதி புகார் அளித்தார்.  ஆனால், புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்காமல், பசுவை மீட்டு தராமல் கடந்த 14 நாட்களாக காலம் தாழ்த்தி வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தாய் பசுவை தேடி கண்டு பிடித்து தரக்கோரி கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி நூதன முறையில் பசுவின் கன்றின் கழுத்தில் அம்மாவை கண்டுபிடித்து தரக்கோரி பதாகையை கழுத்தில் அணிய வைத்து கன்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

கன்று குட்டியுடன் வந்த கோவிந்தனிடம் விரைவில் தாய் பசுவை கண்டுப்பிடித்து தருகிறோம் என கூறியதை தொடர்ந்து அவர் தனது கன்று குட்டியை அழைத்து சென்றார்.

எனினும், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரியிடம் அவர்கள் புகார் மனு அளித்தனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.