விழுப்புரத்தில்..
விழுப்புரம் நகருக்குட்பட்ட காகுப்பம் சாலையில் உள்ள நாவலர் நெடுந்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் டிராவல் ஏஜென்சியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு விஜயா என்ற மனைவியும், ராஜலட்சுமி, ஜோதி என 2 மகள்களும் உள்ளனர். ராஜசேகரின் முதல் மகளான ராஜலட்சுமிக்கு திருமணமாகி ஊட்டியில் வசித்து வருகிறார்.
2வது மகளான ஜோதி (21) , விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ வரலாறு முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை ராஜேசேகர் தனது மனைவி விஜயாவுடன் வெளியே சென்றிருந்தார்.
வீட்டில் தனியாக இருந்த ஜோதி தனது வீட்டின் கதவினை உள்பக்கமாக தாழிட்டு கொண்டு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி திடீரென தீ வைத்து கொண்டார்.
இதில் ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜோதி தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள் காப்பாற்ற முயன்றும் முடியாத நிலையில் பலரது கண்முன்பே தீயில் உடல் கருகி கல்லூரி மாணவி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயில் கருகி உயிரிழந்த கல்லூரி மாணவி ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி ஜோதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திருமண ஏற்பாடு செய்வதில் பெற்றோருடன் ஜோதி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவே மனமுடைந்து கல்லூரி மாணவி ஜோதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் தற்கொலைக்கான முழு காரணம் என்ன என்பது குறித்து விழுப்புரம் நகர போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி ஜோதி தீயில் எரிந்து உயிரிழக்கும்போது,
அங்கிருந்தவர்களால் செல்போனில் எடுக்கப்பட்ட பதைபதைக்கவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.