காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே களியாம் பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த ஆண் குழந்தை பேசியதாக பரவப்படும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சேர்ந்த சின்ன அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி கர்பம் தரித்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
பிரசவ வலியால் துடித்த ரேவதியை அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர் சரண்ராஜ், செவிலியர் பிருந்தா ஆகியோர் ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது காலை 10.15மணியளவில் ரேவதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று சுகபிரசவத்தில் பிறந்துள்ளது.
இந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த உடன் திடீரென “நான் வெளியே வந்துவிட்டேன்” என்ற குரலை மருத்துவர்கள், செவிலியர்கள் கேட்டுள்ளனர். பலரும் எங்கிருந்து இந்த சத்தம் வந்தது என தேடி குழந்தை தான் கூறியது என்பதை உறுதி செய்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தையின் தாய், தூய்மை பணியாளர் என பலரும் ஒருவருக்கொருவர் எப்படி சாத்தியம் என கேட்டு கொண்டனர்.
இந்த செய்தி தீயாய் பரவ பலரும் அந்த குழந்தையை வியப்புடன் வந்து பார்த்து செல்கின்றனர். ஆனால் அந்த குழந்தை அதற்கு பிறகு பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.