கடலூர்..
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், செல்வி தம்பதியின் மகள் தனலட்சுமி. கடலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இவரும், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சற்குரு என்பவரும் காதலித்துவந்தனர்.
இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சற்குரு வேறு ஒரு பெண்ணுடன் திருமண உறவைத் தாண்டிய நட்புடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த விவகாரத்தில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், குழந்தையுடன் தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்ற தனலட்சுமி, அதன்பிறகு விவாகரத்து வழக்கையும் தொடர்ந்திருக்கிறார்.
அந்த வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றம் சென்ற தனலட்சுமியும் அவரின் தாய் செல்வியும், செல்லங்குப்பத்திலுள்ள தனலட்சுமியின் சகோதரி தமிழரசி வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், இன்று அங்கு சென்ற சற்குரு தனலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது திடீரென்று அந்த வீட்டிலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்றிருக்கின்றனர். அப்போது சற்குரு, அவர் மனைவி, அவரின் சகோதரி தமிழரசி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள், தாய் செல்வி ஆகியோர் தீயில் எரிந்துகொண்டிருந்தனர்.
தனலட்சுமியின் ஆறு மாத ஆண் குழந்தையும், சகோதரி தமிழரசி, அவரின் மூன்று மாத பெண் குழந்தையும் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துவிட்ட நிலையில், தனலட்சுமி, சற்குரு, செல்வி ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ”கருத்து முரண்பாடால் விவாரத்து வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். நேற்று இருவரும் நீதிமன்றம் சென்ற நிலையில், இன்று காலை தனலட்சுமியிடம் போனில் பேசியிருக்கிறார் சற்குரு.
அதில் வாக்குவாதம் அதிகரிக்கவே நேரில் சென்றிருக்கிறார். தனலட்சுமியின் சகோதரி கணவர் பிரகாஷ் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தனலட்சுமி, அவரின் குழந்தை, சகோதரி தமிழரசி மற்றும் அவரின் குழந்தை, தாய் செல்வி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்திருக்கின்றனர்.
அப்போது அங்கு சென்ற சற்குரு, தனலட்சுமியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது தன்மீதும் மற்றவர்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருப்பார் என்று சந்தேகிக்கிறோம். 90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் தனலட்சுமி, அவர் தாய் செல்வியிடம் வாக்குமூலம் பெறும் முயற்சியில் இருக்கிறோம்” என்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமியின் தாய் செல்வி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தனலட்சுமியும் கணவர் சற்குருவும் அங்கேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், நீதிபதியிடம் தனலட்சுமி கொடுக்கும் வாக்குமூலத்தின் ஆடியோ வெளியாகியிருக்கிறது. சரியாக 2.44 நிமிடங்கள் இருக்கும் அந்த ஆடியோவில், ”என் கணவர் சற்குரு அவர் மீதே பெட்ரோல் ஊற்றிக்கொண்டார்.
அப்போது நான் அவரைத் தள்ளிவிட்டேன். அங்கு அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. அதனால் அனைவருக்கும் தீப்பற்றிவிட்டது” என்று நிறுத்தி, நிறுத்தி தெரிவித்திருக்கிறார். தனலட்சுமி கூறுவதுபோல நடந்திருந்தால், பெட்ரோல் ஊற்றாமல் மற்றவர்கள் எப்படி உயிரிழந்தார்கள்,
அனைவருக்கும் தீக்காயம் பட்டது எப்படி என்ற குழப்பம் நிலவுகிறது. அதேசமயம், “தீப்பற்றியவுடன் சற்குரு அங்கும் இங்கும் ஓடியிருப்பார். அப்போது மற்றவர்கள்மீது தீ பரவியிருக்கலாம்” என்கின்றனர் போலீஸார்.