நாகப்பட்டினத்தில்..
முன்பெல்லாம் 50, 60 வயதுக்கு மேல் வந்த மாரடைப்பு, இதய நோய், சர்க்கரை இவை அனைத்தும் மிக இளம் வயதிலேயே வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மாரடைப்பால் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.
அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை பார்க்க வேண்டிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் பெரிய காருகுடி கிராமத்தில் வசித்து வருபவர் இளையராஜா. இவரது மகன் கவிப்பிரியன் வலிவலம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
வழக்கம் போல் பள்ளி சென்ற கவிப்ப்ரியன் விளையாட்டு வகுப்பில் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தனது வகுப்பு மாணவர்களுடன் விளையாட்டு வகுப்பில் பள்ளி மைதானத்தை சுற்றி ஓடி வந்தான்.
3வது சுற்றில் கவிப்பிரியன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஓடிச்சென்று விபரம் தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவனை வலிவலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து முதலுதவி அளித்தனர்.
மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவிப் ப்ரியனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வலிவலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. துள்ளி ஓடி பள்ளிக்குச் சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.