தமிழகத்தில்..
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் இளைஞர்களின் முதற் தொழிலாகா மாறியிருக்கும் ஆன்லைன் ரம்மியை முழுவதுமாக தடை செய்ய முடியாமலும், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமலும் தடுமாறி வருகிறது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள் முதியவர்கள் வரை கையில் மொபைலுடன் தான் பலரின் வாழ்க்கையே. இதில் பலரும் ஆன்லைன் விளையாட்டில் நேரத்தை தொலைத்து வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் விரக்தியால் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி இளைஞர்கள் முதல் குடும்பத்தலைவர்கள், முதியவர்கள் வரை ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து வருவதும் வழக்கமான கதையாகி வருகிறது. தொடக்கத்தில் கையில் பணத்துடன் விளையாட்டை துவங்குகின்றனர்.
அடிமையான பிறகு பணத்தை கடன் வாங்கியாவது விளையாட வேண்டும் என்று எண்ணத்தில் கடன் வாங்குகின்றனர். கடன் அதிகமானதால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அந்த வரிசையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த ரியாஸ்கான் என்பவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வசித்துவரும் ரியாஸ்கான் மொபைல் கடையில் பணிபுரிந்து வந்தார். அவருடைய பொழுதுபோக்காக ஆன்லைன் ரம்மி இருந்து வந்தது. மொபைல் கடையில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து விளையாடியுள்ளார்.
இதில் அவர் சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்து விட்டார். பணத்தை இழந்த ரியாஸ்கான் விரக்தியில் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு காவிரி ஆற்றில் குதித்து விட்டார்.
காவிரி ஆற்றில் தற்கொலை செய்துகொண்ட ரியாஸ்கானின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தற்கொலைகளுக்கு அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.