இந்தியாவில்..
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் அருகில் இருக்கும் மனிதனை கொஞ்சம் கூட யோசிக்க மறந்த ஒரு தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது. மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது.
வாழ்வதற்கு மட்டுமல்ல இறந்தவர்களிடம் கூட இரக்கம் காட்டுவதில்லை என்பதை தான் சமீபத்திய அடுத்தடுத்த நிகழ்வுகள் உறுதி செய்து வருகின்றன. ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாமுலு.
இவரது மனைவி 30 வயது ஈடே குரு. இதில் ஈடேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விசாகா மாவட்டம் தகரபுவலசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் இருந்தும் இவரது உடல்நிலை சரியாகவில்லை.
சாமுலுவின் கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது. அடுத்த கட்ட மருத்துவ செலவுக்கு யாரிடம் கடன் கேட்கலாம் என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தார்.
இதனால் ஈடே குருவை டிஸ்சார்ஜ் செய்து தனது வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். ஆந்திராவில் அவர் தங்கியிருந்த இடத்தில் அவர்களது சொந்த கிராமம் கிட்டத்தட்ட 145 கி.மீ. இதற்காக ஒரு ஆட்டோவிடம் பேசிவிட்டு மனைவியை அழைத்துகொண்டு கணவர் கிளம்பினார்.
இந்நிலையில் ஆட்டோ விஜயநகரம் மாவட்டம் கந்தியாடா மண்டலம் ராமாவரம் வந்தபோது எதிர்பாராத விதமாக மனைவி ஈடே குரு உயிரிழந்தார். ஈடே குரு உயிரிழந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர் ‘மேலும் அழைத்துசெல்ல முடியாது’ எனக்கூறி இவர்களை கீழே இறக்கிவிட்டார்.
பாதி வழியில் ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்டதால் என்ன செய்வது என தெரியவில்லை. கையில் பணமும் இல்லை. மொழியும் புரியவில்லை. ஊருக்கு போக இன்னும் 115 கிமீக்கு மேல் இருந்தது.
இந்நிலையில் வேறு வழியின்றி மனைவியை தன் தோளில் தூக்கிக்கொண்டு எந்த பக்கம் செல்கிறோம் என தெரியாமலேயே சாமுலு நடக்கத் தொடங்கிவிட்டார். 4 கி.மீ நடந்து சென்ற நிலையில் அவரை கவனித்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் சாப்பிட சாமுலுவிற்கு உணவை கொடுத்தனர். பின்னர் ஒரு தனியார் ஆம்புலன்ஸை அழைத்து சாமுலுவையும் அவரது மனைவியின் உடலையும் அவர்களது வீட்டில் விடும்படி அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆந்திரா – ஒடிசா எல்லைக்கும், ஒடிசா போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.