பாசக்கயிறாக மாறிய துப்பட்டா.. பிறந்தநாளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

377

கேரளாவில்..

மாவு அரைத்துக்கொண்டிருக்கும்போது இளம்பெண்ணின் துப்பட்டா கிரைண்டரில் சிக்கி உயிரிழந்துள்ளது கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெரும்பாலான பெண்கள் சுடிதார் அணியும்போது துப்பட்டாவையும் அணிவர்.



அவ்வாறு அணியும் துப்பட்டா சில நேரங்களில் அவர்களுக்கு பாசக்கயிறாகவே மாறுகிறது. குறிப்பாக பெண்கள் ஸ்கூட்டி, பைக் உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும்போது துப்பட்டாவை அணிந்து செல்வர்.

அவ்வாறு அணியும்போது அவர்கள் அதனை சரிவர பாதுகாக்கவில்லை என்றால், அது வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, வாகனம் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும். இதுபோன்ற செய்திகள் அதிகமானவை நாம் அறிந்த ஒன்றே.

அதோடு இது போன்ற சம்பவத்தால் பல குடும்பங்கள் சோகத்தில் மூழ்கியே இருக்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள தலப்பாடி என்ற பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயஷீலா (24) என்ற இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், தனது மனைவியின் விருப்பத்திற்காக ரஞ்சன் அவரை வேலைக்கு செல்ல அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஜெயஷீலா அவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பாவத்தன்று அவருக்கு பிறந்த நாள். எனவே புது சுடிதார் ஒன்றை அணிந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஏதுவாக ஷால் (துப்பட்டா) அணிந்தும் உள்ளார்.

அவர் அங்கிருந்த ஒரு பெரிய கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கிரைண்டரில் அவரது ஷால் எதிர்ப்பாராத விதமாக சிக்கியது.

இதில் நிலைகுலைந்துபோன அவர் தட்டு தடுமாறி கீழே விழுந்தார். விழுந்ததில் அவருக்கு இரத்தத்துடன் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஜெயஷீலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

துப்பட்டா அணியும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அறிவுறித்தியுள்ளனர். பிறந்த நாளன்று வேலைக்கு சென்ற இளம்பெண், கிரைண்டரில் துப்பட்டா சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.