என்னை விட்டு போகாதே.. மணப்பெண்ணின் சேலையை பிடித்து தடுத்த பாசமான நாய்.. நெகிழ்ச்சி வீடியோ!!

366


நாகர்கோவில்லில்…நாகர்கோவில் அருகே பாசமாக வளர்த்த மணப்பெண்ணை பிரிய மனம் இல்லாமல் நாய் ஒன்று போராடிய வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பொதுவாக பலருக்கும் வளர்ப்பு நாய் மீது மிகுந்த பாசம் இருக்கும். அதனை தங்களது வீட்டில் ஒருவரை போலவே மக்கள் கருதுவர்.தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே அந்த நாய்களை பார்த்துக் கொள்பவர்கள், நொடி நேரம் கூட அதனை பிரிவதும் கிடையாது. இதன் காரணமாகவே தங்கள் வளர்ப்பு நாய்களை தனியாக விட்டு விட்டு வெளியூர் செல்லக்கூட பலரும் யோசிப்பது உண்டு.
அந்த வகையில் பாசமாக வளர்த்த மணப்பெண்ணை பிரிய மனமின்றி நாய் போராடிய வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


நாகர்கோவில் அருகே உள்ள சித்திரை திருமகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவருடைய மகள் சுகப்பிரியா. இவருக்கும் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அதன் பின்னர் மணப்பெண் வீட்டில் இருந்து திருமணம் ஆகி தம்பதியர் புகுந்த வீட்டிற்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது சுகப்பிரியா பாசத்துடன் வளர்த்துவந்த நாய் தனது வாலை ஆட்டியபடி குரைத்தது. பின்னர் காரில் ஏறச் சென்ற சுகப்பிரியாவை தொடர்ந்து சேலையை பிடித்து இழுத்தபடியும் முன்னங்கால்களை அவர் மீது வைத்தும் தனது பாசத்தை வெளிப்படுத்தியது.


தொடர்ந்து அந்த சுகப்பிரியாவும் தனது வளர்ப்பு நாயை சமாதானப்படுத்த முயன்றார். இதனால் அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சுகப்பிரியா தனது கணவருடன் காரில் ஏறிச் சென்ற பின்னர் நாய் மிகுந்த சோகமடைந்தபடி படுத்திருந்தது.

சுகப்பிரியா கல்லூரிக்கு செல்லும்போதும் அவர் வரும்வரையில் வீட்டின் வாசலிலேயே தங்களது நாய் காத்திருக்கும் என்றும் இப்போது வீட்டை விட்டு பிரிவதால் அதனை நாயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும்,

சுகப்பிரியாவின் வீட்டினர் தெரிவித்திருக்கின்றனர். பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.