கஜகஸ்தான் நாட்டு பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!

473

தஞ்சாவூரில்..

தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கஜகஸ்தான் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். தமிழ் முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதியின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவ, நெட்டிசன்கள் பலரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



காதலுக்கு எவ்வித வேறுபாடும் இருப்பது கிடையாது. மொழி, தேசம் என அத்தனை பாகுபாடுகளையும் தகர்க்கும் காதல் தான் உலக மக்களையும் ஒன்றிணைக்கிறது. உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வதும், பலதரப்பட்ட மக்களை சந்திப்பதும் தற்போது மிகவும் சகஜமாகிவிட்டது.

அதுவே, சிலரது வாழ்க்கையில் காதலுக்கான பாதையாகவும் மாறிவிடும். அப்படியானவர்களில் ஒருவர் தான் தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன். யோகா ஆசிரியரான இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த புலவஞ்சி கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர்.

33 வயதான இவர் யோகாவில் டிப்ளமோ முடித்தபிறகு கஜகஸ்தானில் யோகா ஆசிரியராக வேலை கிடைத்து சென்றிருக்கிறார். அப்போது,அங்கு யோகா கற்றுக்கொள்ள வந்த அல்பினால் எனும் பெண்ணுடன் அவருக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில் நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இருவரும் தங்களது காதல் குறித்து வீட்டினரிடம் பேசி இருக்கின்றனர்.

இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன. அல்பினால் தனது குடும்பத்தினருடன் வருகை தர மாப்பிள்ளை வீட்டினர் அவர்களை விமர்சையாக வரவேற்றிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தம்பதிகளை வாழ்த்தினர்.

இதுபற்றி மணமகள் அல்பினால் பேசுகையில், தனக்கு தமிழக மக்களின் கலாச்சாரம் மிகவும் பிடித்திருப்பதாகவும் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுவருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தங்களது காதல் திருமணம் பற்றி பிரபாகரன் பேசுகையில்,”நான் கஜகஸ்தானில் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்த போது அல்பினால் யோகா கற்றுக்கொள்ள வந்திருந்தார்.

இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுபற்றி எங்களது வீட்டினருக்கு தெரியப்படுத்தினோம். அல்பினாலுக்கு தந்தை கிடையாது. அவருடைய தாய் எங்களுடைய விருப்பத்தை அறிந்து முதலில் யோசித்தார். பின்னர் சம்மதம் தெரிவித்தார். ஆகவே சொந்த ஊரில் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம்” என்றார்.