டெல்லியில்..
டெல்லியில் ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அஃப்தாப் கொலைசெய்து பல துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் அதே டெல்லியில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.
டெல்லியிலுள்ள நஜாப்கர் என்ற இடத்தில் உணவகம் நடத்திவருபவர் சாஹில் கெலாட் (24). கடந்த 2018-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டருக்கு சென்ற இடத்தில், சாஹிலுக்கு நிக்கி யாதவ் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.
இருவரும் ஒரே பஸ்ஸில் சென்று வந்தததால் அடிக்கடி சந்தித்து, பேசிக்கொண்டனர். இதனால் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அதன் பிறகு இருவரும் வேறு வேறு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தனர்.
ஆனால் இருவரும் கிரேட்டர் நொய்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒரே அறையில் தங்கிப் படித்துவந்தனர். கொரோனா காலத்தில் இருவரும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.
கொரோனா முடிந்த பிறகு மீண்டும் வாடகை வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். சாஹில் தனியாக உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். சாஹில் தன் காதலை வீட்டில் சொல்லாமல் இருந்தார். பெற்றோரின் நிர்பந்தத்துக்குப் பணிந்து வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார்.
ஆனால் அதற்கு நிக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே, நிக்கியை பிப்ரவரி 9-ம் தேதி இரவு தன்னுடைய காரிலிருந்த டேட்டா கேபிள் மூலம் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார்.
உடலை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு தன் உணவகத்துக்குச் சென்றார். அங்கிருந்த பெரிய ஃபிரிட்ஜில் நிக்கியின் உடலை வைத்துவிட்டு 10-ம் தேதி வழக்கம்போல் வேறு ஒரு பெண்ணை சாஹில் திருமணம் செய்துகொண்டார்.
சில நாள்கள் ஆன நிலையில், நிக்கியை அவரின் உறவினர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு விசாரணையைத் தொடங்கினர்.
நிக்கி ஏற்கெனவே சாஹிலுடன் இருப்பது அவரின் உறவினர்களுக்குத் தெரியும். எனவே, சாஹில் குறித்து அவர்கள் போலீஸில் தெரிவித்திருந்தனர். போலீஸார் சாஹிலைத் தேடி அவரின் சொந்த கிராமத்துக்குச் சென்றனர்.
அங்கு அவர் இல்லை. அவரது மொபைல் போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சாஹிலைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட உண்மைகளைத் தெரிவித்தார். பாபா ஹரிதாஸ் நகர் போலீஸார் சாஹில் தெரிவித்த வாக்குமூலத்தைச் சரிபார்த்துவருகின்றனர்.