42 வருடங்களுக்குப் பின்னர் பெற்றோரை தேடியலையும் டென்மார்க் தமிழ்ப்பெண்!!

365

டென்மார்க்கில்..

சிறிய வயதிலேயே பெற்றோரை பிரிந்து சென்ற பெண் ஒருவர் தற்போது தனது பெற்றோரை தேடிவருகிறார். பொதுவாக பலருக்கும் சிறிய வயது வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். ஆனால், சிறுவயதிலேயே பெற்றோர்களை பிரிந்தவர்களுக்கு காலம் அப்படி இருப்பதில்லை.

மீண்டும் தங்களது பெற்றோர்களை சந்திக்கும் தருணத்திற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இவர்களது வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்தது. அப்படியானவர்களில் ஒருவர் தான் நிஷா. டென்மார்க்கில் தற்போது தனது கணவருடன் வசித்துவரும் நிஷா தனது பெற்றோரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

டென்மார்க்கை சேர்ந்தவர் பேட்டரிக். பிலாங்சர் டர்பன் பகுதியை சேர்ந்த இவருக்கு 45 வயதாகிறது. இவர் நிஷாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 1980 ஆம் ஆண்டு 3 வயது குழந்தையாக நிஷா இருந்தபோது சென்னை பல்லாவரத்தில் உள்ள கிறிஸ்டியன் குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்டுள்ளார். அப்போது இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த டென்மார்க்கை சேர்ந்த ராஸ் முஷன் என்பவர் நிஷாவை கண்டதும் தத்தெடுக்க விரும்பியிருக்கிறார்.

அதன்படி, நிஷாவை அழைத்துக்கொண்டு டென்மார்க் திரும்பியுள்ளார் ராஸ். அப்படித்தான் நிஷாவிற்கும் டென்மார்க்கிற்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. காலங்கள் உருண்டோடிய நிலையில் நிஷாவிற்கு தன்னுடைய பெற்றோரை பார்க்க வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது.

இதனை தனது கணவரிடமும் தெரிவித்திருக்கிறார் நிஷா. அவரும் சம்மதம் தெரிவிக்கவே, இந்தியாவிற்கு வந்திருக்கின்றனர் இருவரும். பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவார் என்பவரின் உதவியுடன் தமிழகத்தின் சேலத்தில் தனது பெற்றோரை தேடிவருகிறார் நிஷா.

இதுகுறித்து அவர் பேசுகையில்,”42 வருடங்களுக்கு முன்னர் எனது பெயர் மீனாட்சி என ஞாபகம் இருக்கிறது. சொந்த ஊர் கபூர் அல்லது கருப்பூர் என்பதுபோல நினைவிருக்கிறது.

அதனால் இப்பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகளை பார்த்தால் பழைய ஞாபகம் வருகிறதா? என இங்கு வந்தேன். எப்படியும் எனது பெற்றோரை கண்டுபிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.