வியாபாரியை ஏமாற்றி 2வது திருமணம்.. காட்டிக்கொடுத்த கூகுள்.. திருடனின் மனைவி சிக்கியது எப்படி ?

452

குஜராத்தில்..

5000-க்கும் மேற்பட்ட கார்களை திருடிய வழக்கில் கைதான பிரபல திருடனின் மனைவி, தற்போது வியாபாரி ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் போர்பந்தர் பகுதியில் உள்ள ஜலராம் குதிர் என்ற இடத்தை சேர்ந்தவர் விமல் கரியா. இவர் அந்த பகுதியில் சொந்தமாக தொழில் செய்து இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தனக்கு விவாகரத்து ஆன பெண் வேண்டும் என்று மேட்ரிமோனியல் சைட் ஒன்றில், தனது குறிப்புகளை பதிவேற்றியுள்ளார். அப்போது இவருக்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ரீட்டா தாஸ் என்பவர் அறிமுகமானார்.

இருவரும் மொபைல் பேசி மூலம் பழகி ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டனர். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். எனவே விமல் ரீட்டாவிடம் விவாகரத்து பத்திரத்தை கேட்டுள்ளார்.

அதற்கு ரீட்டவோ, தான் பஞ்சாயத்துமுறையில்தான் விவாகரத்து பெற்றதாகவும், அதனால் தன்னிடம் பத்திரம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய விமலும், வேறெதுவும் பேசாமல் ரீட்டாவை முறைப்படி திருமணம் செய்துள்ளார்.

திருமனம் முடிந்து இருவரும் ஒன்றாக குஜராத்தில் வஹந்து வந்த நிலையில், 6 மாதம் கழித்து அசாமிலுள்ள தனது அம்மா நிலா பிரச்னை காரணமாக தன்னை நேரில் அழைத்ததாக கூறி சென்றுள்ளார்.

அங்கே சென்ற மனைவி, திரும்ப வரவும் இல்லை; கணவரை தொடர்பு கொண்டு எதுவும் பேசவில்லை. மாறாக ரீட்டாவின் வழங்கறிஞர் விமலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது தங்கள் மனைவி ரீட்டா கேஸ் ஒன்றில் சிக்கியுள்ளதாகவும், பதற்றப்பட வேண்டாம் எனவும், இது ஒரு சிறிய கேஸ்தான் எனவே 1 லட்சம் அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த விமல், என்ன ஏது என்று கேட்டதற்கு வழக்கறிஞர் சரியாக பதில் கூறவில்லை. இதனால் பணத்தை விமலும் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பதிலாக ரீட்டாவின் வழக்கறிஞர் ஆவணம் ஒன்றை விமலுக்கு அனுப்பியுள்ளார்.

அதில் ரீட்டாவின் முழுப்பெயர் ரீட்டா செளகான் என்று இருந்துள்ளது. மேலும் அவர் மோசடி, திருட்டு, கொலை மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் விமலுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமல் உடனே ரீட்டாவை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முறையாக எதுவும் பதிலளிக்காத ரீட்டா, விமல் போன் காலை கட் செய்துவிட்டு, ப்ளாக்கிலும் போட்டுள்ளார்.

இதையடுத்து ரீட்டா குறித்து நெட்டில் தேடுகையில், அவர் கார் திருட்டில் கடந்த ஆண்டு கைதான அனில் செளகானின் மனைவி என்றும் தெரியவந்தது. இதையடுத்து ரீட்டா மீது காவல்துறையில் பாதிக்கப்பட்ட விமல் புகார் கொடுத்தார்.

மேலும் தன்னை ஏமாற்றிய ரீட்டா, வேறு யாரையும் ஏமாற்றுவதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனில் செளகான், என்பவர் 5000-க்கும் மேற்பட்ட கார்களை திருடிய வழக்கில் கடந்த ஆண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு (1990’s) முன்பிருந்தே தொடர்ந்து கார் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறிப்பாக அசாம், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் கார்களை திருடி, மற்ற பக்கம் அந்த கார்களை விற்று வந்துள்ளார். அதோடு இவருக்கு அரசியல் பலமும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் சொந்தமாக ரூ.10 கோடி மதிப்பிலான வில்லா வைத்திருக்கிறார்.

விலையுர்ந்த துணி மணிகள், கார் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 7 குழந்தைகள் இருக்கும் நிலையில், அனில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் இவருடன் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

அதில் இரண்டு மனைவிகள், தங்கள் கணவர் அனில் இதுபோன்ற தொழில் செய்து வருவது தங்களுக்கு தெரியாது என்று வாக்குமூலம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அனிலிடம் இருந்து அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அவர் தற்போது சிறையில் உள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அனிலுக்கும், அவரது மனைவி ரீட்டாவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இந்த சூழலில் வேறொருவரை திருமணம் செய்து அவரை ஏமாற்றியுள்ளார் ரீட்டா. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.