90,000 மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு…ஒரு கோடி செலவில் பேன்சி நம்பர் : இந்தியாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர்!!

314

சிம்லாவில்..

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றுக்கு பேன்சி நம்பர் வாங்க இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ₹ 1 கோடி ரூபாய் செலவழித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் நகரை சேர்ந்த நபர் ஒருவர் ₹ 90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான HP-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக சிம்லா ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில் அந்த நபர் கலந்து கொண்டுள்ளார்.

HP 99-9999 என்ற உரிமத் தகடுக்கு 26 ஏலதாரர்கள் வரை போட்டியிட்ட நிலையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனத்தின் உரிமையாளர் இந்த பேன்சி பதிவு எண்ணை ₹ 11,215,500 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

₹ 1000 ரூபாய்க்கு தொடங்கிய பதிவு ஏலம் இறுதியில் ₹ 11,215,500 ரூபாய்க்கு நிறைவடைந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1.12 கோடி ரூபாய் என்பது மாநில வரலாற்றில் இருசக்கர வாகனப் பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும் என இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இந்த ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தும் அறிக்கையை கோரியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றுக்கு பேன்சி நம்பரை வாங்க ₹ 1 கோடி ரூபாய் வரை செலவழித்த நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.