வவுனியாவில் யாழ் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கு பொது அமைப்புக்கள் கண்டனம் : பிரதம செயலாளருக்கு கடிதம்!!

646

பொது அமைப்புக்கள் கண்டனம்..

யாழ்ப்பாண மருத்துவ கழிவுகளை வவுனியாவில் எரிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பினையடுத்தும் வவுனியா ஓமந்தையில் மருந்துவ கழிவுகள் எரிப்பது தொடர்பில் மாவட்ட சிவில் சமூகத்தினர் அவசர கலந்துரையாடல் ஒன்றினை குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (23.02.2023) காலை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இனி மேல் தெல்லிப்பளையில் எரிக்கப்படாது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித் துள்ளார்.

இனிவரும் நாட்களில் மருத்துவக்கழிவுகள் வவுனியாவில் எரிக்கப்படும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இதுவரை தெல்லிப்பளையில் எரிக்கப்பட்டு வந்தது.

அங்கு உரிய சுகாதார முறைகள் பின்பற்றப்படாமல் சுற்றுச்சூழலிலுள்ள மக்களிற்கு ஆபத்தான முறையில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதாக பலமுறை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்ததாகவும் யாழ்ப்பாணத்தினை தளமாக கொண்டு இயங்கும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தன.

அதனையடுத்து வவுனியா சிவில் சமூகத்தினர் இணைந்து இன்று கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதில் பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்து கலந்துரையாடலின் இறுதியில் பிரதம செயலாளருக்கு கடிதம் அனுப்புவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கடிதத்தில் வவுனியாவில் மருத்துவ கழிவுகள் ஓமந்தை பாடசாலைக்கு அருகில் எரிப்பதும் கழிவகற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளுவதும் இலங்கை அரசியலமைப்புக்கு முரனானதும் சர்வதேச அடிப்படை நியமங்களுக்கும் முரணானது,

எனவே முறையான கழிவு முகாமைத்துவத்தினை நடைமுறைப்படுத்துமாறும் மக்கள் ஆகிய நாம் வீதிக்கு இறங்காமலும் இருக்கும் வண்ணம் உடனடியாக இவற்றில் தலையீடு மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.