விருதுநகரில்..
விருதுநகா் மாவட்டம் சிவகாசி பாரதி நகரில் பட்டாசுத் தொழிலாளி பன்னீா்செல்வம் (40), அவரது மனைவி முத்துமாரி(31) தம்பதி வசித்து வந்தனர். இவருக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்தது.
இதனால் குழந்தை இல்லாத சோகத்தில் இருந்த இந்த முத்துமாரி, நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கருவுற்றார். அவா் பிரசவத்துக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் முத்துமாரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இறந்த குழந்தையின் உடலை உறவினர்களுக்கு காட்டிய மருத்துவமனை நிர்வாகம், தாய் முத்துமாரியை பார்க்க நீண்ட நேரமாக மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால், அதன்பிறகு முத்துமாரியும், அவரது குழந்தையும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவ மாணவா்களைக் கொண்டு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், தாயும், குழந்தையும் இறந்து விட்டதாக உறவினா்கள் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டதுடன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
பாதிக்கப்பட்ட பன்னீா்செல்வத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு, அரசுப் பணி வழங்கக் கோரி மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் அமா்ந்து 2ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா, மருத்துவமனை நிலைய அலுவலா் முருகேசன், உதவி மருத்துவ நிலைய அலுவலா் முரளிதரன் ஆகியோா் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினா்.
அதில் முத்துமாரிக்கு முறையான சிகிச்சை அளித்த நிலையில், அதிகளவு ரத்தம் வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பன்னீா்செல்வத்தின் உறவினா்கள் வாக்குவாதம் செய்தனா். பிறகு முத்துமாரி உடல் கூறாய்வு செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக உடல் கூறாய்வு விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் பன்னீா்செல்வம் அளித்த புகாரின் பேரில் தாய், சேய் இறப்பு குறித்து விருதுநகா் கிழக்கு போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.