வவுனியாவில் தொழிற் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

295

VTC

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் 10 பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என வவுனியா, மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஏ.டபிள்யு.ஜி.ஆர்.ஆர் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் புதிய 10 பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பயிலுனர்களை இணைத்துக் கொள்ளவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இப் பயிற்சி நெறிகள் பகுதி நேரம், முழு நேரம் என்ற அடிப்படையில் இடம்பெறவுள்ளன.

இப் பயிற்சி நெறிகளுக்கு பாடசாலையை விட்டு விலகியவர்கள் தொழில் வாய்ப்புகளின்றி உள்ள இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்க முடியும்.

இப் பயிற்சி நெறியை நிறைவு செய்வதனூடாக என்விகியு NQU மட்டத்திலான சான்றிதழை பெற்றுக்கொள்ள முடிவதுடன் அரச அங்கீகாரம் பெற்ற பயிற்சி நெறியை பெறுவதற்கும் இயலுமானதாக இருக்கும்.

இதேவேளை இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பயிற்சி நெறிகள் மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டமையினால் தொழில் வாய்ப்புகளை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

இந்த வகையில் 2014 ஆம் ஆண்டிற்கான பயிற்சி நெறிகளில் கணினி மென்பொருள் தொழில்நுட்பவியலாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், குளிரூட்டலும் வளி சீராக்கலும் பயிற்சி நெறிகள் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளன.

தோற்பொருள் உற்பத்தியாளர், தையல், தகவல் தொழில்நுட்ப பயிற்சி நெறிகள் தேக்கவத்தையில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்திலும் மின்னியலாளர், காய்ச்சி இணைப்பவர் (வெட்டர்) பயிற்சி நெறிகள் வைரவபுளியங்குளத்தில் உள்ள பயிற்சி நிலையத்திலும் அழகுக்கலையும் நிகை அலங்கரிப்பும், தையல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், மேசன் பயிற்சி நெறிகள் புதுக்குளம் தொழிற்பயிற்சி நிலையத்திலும், இடம்பெறவுள்ளன.

இதேவேளை, மின்னியலாளர், நீர் குழாய் பொருத்துனர் செட்டிகுளம் பயிற்சி நிலையத்திலும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தச்சு வேலைகள் பயிற்சி செட்டிகுளம் சென்பிரான்ஸஸ் பயிற்சி நிலையத்திலும், மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டி திருத்துனர் பயிற்சி நெறிகள் நெடுங்கேணி பயிற்சி நிலையத்திலும் மற்றும் சில பயிற்சி நெறிகள் மதகு வைத்தகுளம் பயிற்சி நிலையத்திலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிலையங்களிலும் இடம்பெறவுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்களுக்கும் மேலதிக விபரங்களுக்கு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை இல.108, புகையிரத வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா எனும் முகவரியுடன் தொடர்புகொள்ள பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.