படுக்கையிலே உயிரிழந்த தாய்.. உறங்குவதாக நினைத்து 2 நாட்கள் அருகிலே உறங்கிய சிறுவன்!!

388

கர்நாடகாவில்..

அம்மா உறங்குகிறார் என நினைத்து இறந்த தாயின் அருகில் இரண்டு நாட்கள் உறங்கிய சிறுவனின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் ஆர்.டி.நகர் என்ற பகுதியில், அன்னம்மா (வயது 45) எனும் பெண்மணி தனது 11 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இவரின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் சொந்த வீட்டில் வசித்து வந்த அன்னம்மா வருமானம் ஏதும் இல்லாத நிலையில் வீட்டை விற்று விட்டு வாடகை வீட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

வீட்டை விற்று வருமானம் வாங்கிய கடனை அடைக்கவே சரியாக இருந்த நிலையில் கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும் தனது மகனையும் தொடர்ந்து படிக்க வைத்துள்ளார். இதில் அன்னம்மாவுக்கு பேச்சு திறன் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்னம்மா கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு காரணமாக வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனைக்கும் சென்று வந்துள்ளார். ஆனாலும் உடல்நலன் தொடர்ந்து மோசமாகவே இருந்துள்ளது.

தொடர்ந்து படுக்கையிலே இருந்த அன்னம்மா படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் இதனை அறியாத அவரின் 11 வயது மகன் தாய் உறங்குகிறார் என நினைத்து வழக்கம் போல பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

தாய் உடல்நிலை காரணமாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிறுவனுக்கு உணவு கொடுத்த நிலையில், அன்னம்மா இறந்ததை யாரும் அறியவில்லை. அதேபோல இரண்டாவது நாளும் சிறுவன் வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார்.

மூன்றாம் நாளில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இது குறித்து சிறுவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அம்மா உறங்கிக்கொண்டிருக்கிறார் என்றும், அவரின் காது மற்றும் மூக்கில் இருந்து திரவம் கசிவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் சிறுவனின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அன்னம்மா இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் பக்கத்து வீட்டினர் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்கள் வந்து பார்த்து இதனை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அன்னம்மாவின் மகன் அன்னம்மாவின் சகோதரர் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.