கோவிலில் திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய தம்பதிகள்… நெகிழ்ச்சி சம்பவம்!!

264

சிம்லாவில்..

இமாச்சல பிரதேசத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்து கோவிலில் இஸ்லாமிய தம்பதிகளின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை இந்து மக்கள் நடத்தி வைத்துள்ளனர். இது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

பொதுவாக இந்தியா என்றவுடன் உலக மக்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது இங்குள்ள பல வகையான மனிதர்களும் நிலங்களும் தான். ஏராளமான மொழி மற்றும் மதங்களை கொண்டிருந்தாலும் இங்குள்ள மக்கள் இந்தியர் எனும் ஒன்றை புள்ளியில் எப்போதும் இணைந்தே பயணிக்கின்றனர்.

இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய ஊன்றுகோலாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் இஸ்லாமிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர் இந்து மக்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ளது ராம்பூர் பகுதி. இங்கு உள்ள தாக்கூர் சத்யநாராயணன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்புகள் நிர்வகித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்த கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு இஸ்லாமிய தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

அதே பகுதியை சேர்ந்த பொறியாளர்களான தம்பதியர் கோவிலில் தங்களது இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்திருக்கின்றனர். அப்போது, இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள், வழக்கறிஞர் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மணமகளின் தந்தை மகேந்திர சிங் மாலிக், “ராம்பூரில் உள்ள சத்யநாராயண் கோவில் வளாகத்தில் எனது மகளின் திருமணம் நடந்தது.

நகர மக்கள், அது விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகட்டும் அல்லது கோவில் அறக்கட்டளையாகட்டும், அனைவரும் இந்த திருமணத்தை மிகுந்த பொறுப்புடன் நடத்தியிருக்கின்றனர்.

இதன்மூலம் சகோதரத்துவத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒருவரையொருவர் மதிப்புடன் நடத்தினால் அன்பு தழைத்தோங்கும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.