இளம் பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்துவிட்டு ஏமாற்றிய இளைஞன்.. பெண் எடுத்த அதிரடி முடிவு!!

1195

இந்தியாவில்..

“லிவ்விங் டு கெதர்” வாழ்க்கையில் தன்னுடன் இருந்த காதலன் தனது பணம் மற்றும் நகைகளை மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட பெண் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டு மலேசியா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருபவர் ரேணுகோபால் மகள் மகேஸ்வரி (40). இவர், சிங்கப்பூரில் செம்பாவான் வணிக வளாகத்தின் மேற்பார்வையாளராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிறுவனத்திற்கு அருகில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா பரம்பூரைச் சேர்ந்த வாசு மகன் பொன் மணிகண்டன் (30) பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து பொன் மணிகண்டன், மகேஸ்வரியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், தனது ஒப்பந்த காலம் முடிந்து ஊர் திரும்பியதும் பெற்றோரிடம் கூறி சம்மதம் பெற்று, இந்தியாவிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதாகவும் அவரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதன்பின் இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக “லிவ்விங் டு கெதர்” வாழ்க்கை முறையில் கணவன்-மனைவி போல வாழந்து வந்துள்ளனர். இந்த ஐந்து வருடங்களில் பல முறை இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம் பணத்தை மகேஸ்வரியிடம் பெற்ற பொன் மணிகண்டன் தனது குடும்பத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 20 சவரன் தங்க நகை, ஒரு பழைய கார் வாங்க ரூபாய் 2 லட்சம் மற்றும் ரூபாய் 75 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்று வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரோனா காலத்தில் பொன் மணிகண்டன் இந்தியா திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு மகேஸ்வரியிடம் பேசுவதை பொன் மணிகண்டன் குறைத்துக் கொண்டதாக தெரிகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொன் மணிகண்டன் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி, அவரது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

அப்போது அவர்கள், இந்த விவரங்கள் அனைத்தும் எங்களுக்கு தெரியும் என்றும் பொன் மணிகண்டனுக்கு நேரம் சரி இல்லை, நல்லநேரம் வந்த பின்னர் திருமணம் செய்து வைப்பதாக கூறி ஒரு வாரத்தில் மகேஸ்வரியை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின் பொன் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியின் செல்போன் என்னை பிளாக் செய்து, முழுமையாக மகேஸ்வரியை தவிர்த்து வந்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு மீண்டும் பரம்பூருக்கு மகேஸ்வரி வந்துள்ளார்.

அப்போது, குடும்பத்தினர் பொன் மணிகண்டனை, மறைத்து வைத்து சரியான தகவல் தெரிவிக்காததால், ஏமாற்றம் அடைந்த மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன் மணிகண்டனிடம், காவல் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது நடந்ததை ஒப்புக்கொண்ட பொன் மணிகண்டன், பெற்றோருடன் பேசி அழைத்துச் செல்வதாக கூறி சமாதானம் செய்து எழுதிக் கொடுத்துள்ளார்.அதன் பின்னர் காத்திருந்த மகேஸ்வரியை அழைத்து செல்லாமலும், மேலும் ராதிகா என்ற வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகேஸ்வரிக்கு காலக்கெடு முடிவடைந்ததையடுத்து மலேசியா திரும்பிவிட்டார். இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி பரம்பூருக்கு வந்த மகேஸ்வரி, பொன் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினரிடம் பேசியபோது, அவரை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், மகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எங்கு சென்று புகார் தெரிவித்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் குடும்பத்தார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்ற மகேஸ்வரி, தனக்கு நடந்தவற்றை கூறி, தன்னிடம் இருந்து மோசடி செய்து பணத்தை பெற்ற மணிகண்டன் அவரது குடும்பத்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.