உலகம் முழுவதும் 3000 திரையரங்குகள் கோச்சடையான் படம் வெளியானது!!

476

Kochadayan

ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் நேற்று வெளியானது. உலகம் முழுவதும் 3 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பே படம் வெளியாக இருந்தது. ஆனால் சில தொழில் நுட்ப காரணங்களால் தாமதமாகி இப்போது வெளியாகியுள்ளது. பல திரையரங்குகளில் காலை 7 மணி காட்சிகள் நடந்தன. இதனால் அதிகாலையிலேயே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தார்கள்.

ரஜினியின் கட் அவுட்களை திரையரங்கு வாயில்களில் வைத்து இருந்தனர். கொடி தோரணங்கள், பனர்களும் கட்டி இருந்தார்கள். தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக படத்தை தயாரித்துள்ள ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 250க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது.

ஹொலிவுட் படங்கள் அல்லாத எந்த வெளிநாட்டு பிறமொழி படங்களும் இதற்கு முன்னால் அமெரிக்காவில் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது இல்லை என்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல திரையரங்குளில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

படம் பார்த்தவர்கள் நன்றாக வந்துள்ளதாக கருத்துக்களை பேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். ரஜினியின் குரலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் அனிமேஷன் படம் என்பதை மறக்கடித்து விடுகின்றன என்று குறிப்பிட்டு உள்ளனர். இன்னும் சிலர், படம் பிரமாதமாக உள்ளது. இந்த படத்தை எடுத்ததற்காக இந்திய பட உலகம் பெருமைப்பட வேண்டும்.

ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பு அபாரமாக உள்ளது. ரஜினியின் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். ரஜினி இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர்.

ஹாலிவுட் படங்களான அவதார், டின்டின் போன்று மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில் நுட்பத்தில் வரும் முதல் இந்திய படம் இதுவாகும். 125 கோடி செலவில் தயாராகியுள்ளது. ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார்.