
மாமல்லபுரத்தை அடுத்த மணமை பகுதியில் நேற்று முன்தினம் காலையில் நடந்த கோர விபத்தில் சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த சையத் அபுநிகால், ஜித்து, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் சையத் அபுநிகால், நடிகர் நாசரின் தங்கை மகன் ஆவார்.
புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் வந்த இவர்கள் எதிரே வந்த டேங்கர் லொரியில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில் நடிகர் நாசரின் மகன் நூருல்ஹசன்பைசல் மற்றும் விஜயகுமார் என்ற வாலிபர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நூருல்ஹசன்பைசலுக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபத்தான் நிலையில் இருந்த அவருக்கு நேற்று 3½ மணி நேரம் சத்திர சிகிச்சை நடைபெற்றது. 24 மணி நேரம் கழித்து தான் எதையும் உறுதியாக கூற முடியும் என்று வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் நூருல்ஹசன் பைசன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் நாசர் உடனிருந்து மகனை கவனித்து வருகிறார். இது பற்றி கேள்விப்பட்டதும் திரை உலகினர் நேற்று ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று நாசருக்கு ஆறுதல் கூறினார்கள்.





