வவுனியாவில் சமூக ஒருமைப்பாட்டு மையத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

304

Vavuniya

சமூக ஒருமைப்பாட்டு மையத்தின் இவ்வருடத்திற்கான புதிய நிர்வாகத்தெரிவு வவுனியாவில் நேற்றுமுன்தினம் (23.06) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது.

இவ் அமைப்பின் தலைவராக சமூக செயற்பாட்டாளரும் சமாதான நீதவானும் ஆகிய தவராசா தர்ஸன் தெரிவாகியுள்ளதுடன், செயலாளராக சமாதான நீதவான் லோஜினியும் பொருளாளராக வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் நிரோசன் அவர்களும் நிர்வாக உறுப்பினர்களாக வீ.சிறீதரன், ஞா.ஜெயமதன், மகேஸ்வரி, இரோன் பிரசாத், நிம்சாத், பிரதா ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் தவராசா தர்ஸன் தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்..

என்மீதுள்ள நம்பிக்கையில் என்னை தலைவராக தெரிவு செய்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் என்பதுடன் உங்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக்ககொள்கின்றேன்.

சமூக ஒருமைப்பாட்டு மையத்தை அதன் கொள்கை வழிப்பயணத்தில் நேர்த்தியாக வழிநடத்த உங்கள் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்று உங்களை தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.

அண்மைக்காலமாக இடம்பெறும் மதம்சார் பாகுபாடுகளும் பழிவாங்கல்களும் வருத்தமளிப்பதாகவே உள்ளது. இலங்கை ஒரு பல்லினநாடு என்பதை பலர் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை. மதத்தின் பால் சொல்லப்பட்ட சித்தாந்தங்களும் வேதங்களும் வியாபாரத்துக்கு ஏற்றாற்போல விற்பனைப் பொருளாக கூவிவிற்கும் நிலைக்கு மதத்தை சில விசமிகள் கொண்டு செல்கின்றனர்.

இவர்களுக்கு வேண்டியது மதத்தின் தார்மீகமும் அன்புமல்ல விளம்பரமும் வேட்கை தீர்த்தலும் ஆகும். இந்நிலை அகலபாதாளத்துக்கு மனித சமூகத்தை கொண்டு செல்லும் ஆபத்தான செயல். இத்தகைய தீய சக்திகளிடமிருந்து மனிதாபிமானத்தையும், மத சுதந்திரத்தையும் காப்பாற்றவேண்டும்.
அப்போது தான் நாம் அரசியல் யாப்பின் அடிப்படை உரிமைகளை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இதற்கு சமூக ஒருமைப்பாட்டு மையம் முழு மூச்சுடன் உழக்கும்.
அது மட்டுமின்றி மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த தன்னாலான சேவையை வழங்கும். முதற்கட்டமாக குறைந்த பட்சம் இருமொழிகளில் ஆவது பேருந்து பெயர் பலகைகள் காணப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும்.

அவ்வாறு இல்லாது சேவையில் ஈடுபடும் பேருந்துக்கள் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இந் நடைமுறையினை வடக்கு கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் அனைத்து பாகங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் சமூக ஒருமைப்பாட்டுமையம் தன்னை அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பாக சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்களுடனும் பேருந்து சங்க பிரதிநிதிகளிடமும் தனித்தனியாக சந்தித்து முடிவு எட்டப்பட்ட பின்னர் சட்டநடவடிக்கைக்கான வழிவகைகள் குறித்து மக்களுக்கு தெரிவு படுத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.