தேர்வு எழுதிவிட்டு சகோதரனுடன் வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

2401

தமிழகத்தில்..

தமிழகத்தில் நேற்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், தேர்வு எழுதி விட்டு, சகோதரனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி விஷாலி, விபத்தில் பலியானாது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விஷாலியின் சகோதரனும் பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தாழக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் ரவி. அய்யம்பேட்டை அருகே உள்ள பள்ளி ஒன்றில் இவரது மகள் விஷாலி (17) 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று 12ம் வகுப்பு தமிழ் தாள் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற மாணவி விஷாலி, தேர்வு முடிந்த பின்னர், பள்ளியிலேயே தனது தோழிகளுடன் அடுத்த தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.

மாணவிகள் அனைவரும் மாலையில் வீடு திரும்பிய நிலையில், தனது தங்கையை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த விஷாலியின் சித்தப்பா மகன் பிரதீப் (23), மோட்டார் சைக்கிளில் விஷாலியின் பள்ளிக்குச் சென்றிருந்தார்.

பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்டனர். இவர்களது மோட்டார் சைக்கிள், தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் நல்லிச்சேரி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விஷாலி, பிரதீப் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு சென்றனர்.

பின்னர் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் இருவரின் உறவினர்கள், விஷாலி படித்த பள்ளியின் ஆசிரியைகள், சக மாணவிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த விபத்து காரணமாக தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.