உத்தரப்பிரதேசத்தில்..

தன் மீது அதிகமாக ஒருவர் விருப்பம் கொள்ளும் சமயத்தில், அவர்கள் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அவ்வபோது இணையத்தில் வைரல் ஆவதையும் கவனித்திருப்போம்.

கடந்த ஆண்டு கூட குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷமா பிந்து என்ற இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டிருந்தார். குடும்பத்தினர் அனைவரின் ஆதரவுடன் இந்த திருமணம் படுஜோராக நடைபெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்து தனியாக தேனிலவுக்கு ஷமா பிந்து சென்றிருந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் அதிகம் பேசும் பொருளாக மாறி இருந்தது.

இந்த நிலையில் ஏறக்குறைய அதே போல மற்றொரு நிகழ்வும் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. ஆனால் இந்த இளம் பெண், இந்துக்களின் கடவுளான கிருஷ்ணனின் சிலைக்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆவ்ரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷா. இவருக்கு தற்போது 30 வயதாகும் சூழலில் முதுகலை பட்டம் படித்துவிட்டு, சட்டப் படிப்புக்கான LLB படிப்பையும் படித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பலருக்கும் கடவுள் மீது அதிக பிரியம் இருப்பது போல ரக்ஷாவுக்கும் சிறு வயது முதலே கிருஷ்ணன் மீது அதிகம் அன்பும், பக்தியும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து வைணவ புராண கதைகளில் வரும் ஆண்டாளைப் போல கிருஷ்ணன் மீது பற்று கொண்ட ரக்ஷா அவரை திருமணம் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை கடந்த ஆண்டு பெற்றோரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்ட ரக்ஷாவின் பெற்றோர், அவரை மதுராவில் உள்ள பிருந்தாவன் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர் ஆகியோரின் ஏற்பாட்டின் பெயரில், உறவினர்களின் வீட்டில் வைத்து கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிந்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ரக்ஷா.

இதனைத் தொடர்ந்து, அந்த கிருஷ்ணர் சிலையுடன் தனது தாய் வீட்டிற்கும் ரக்ஷா திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இருமுறை தனது கனவில் வந்த கடவுள் கிருஷ்ணர், தனக்கு மாலை அணிவித்ததாகவும் ரக்ஷா குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அவரது குடும்பத்தினர் இதுபற்றி பேசுகையில், இந்த திருமணத்தில் அனைவரும் பங்கேற்றதாகவும் கடவுளின் பிரார்த்தனையுடன் இந்த திருமணம் நடந்தது என்றும் ரக்ஷா முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றும் தெரிவித்துள்ளனர்.





