வவுனியா ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைக்காத அரச ஊழியர்களின் காணிகள் பறிமுதல் செய்யப்படும் : வவுனியா அரசாங்க அதிபர்!!

309

Vavuniya_District

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இலவசமாக காணிகளைப் பெற்றுக் கொண்ட அரச ஊழியர்கள் வீடுகளை அமைக்காத பட்சத்தில் அவர்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏனையவர்களுக்கு வழங்கப்படுமென வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட அபிவிருத்திக் குழுவினருக்கும் வவுனியா மாவட்ட அரச அதிபருக்குமிடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

மூன்று ஆண்டுகளாகியும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணிகளைப் பெற்றவர்களில் சிலர் வீடுகளை அமைக்கும் பணியை ஆரம்பிக்கவில்லை. அதனால் அங்குள்ள ஏனைய அரச ஊழியர்கள் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். அங்கு வீடுகளை அமைத்து வாழும் அரச ஊழியர்களின் நலன்கருதி அந்தப் பகுதிக்கு தினமும் பஸ் சேவை நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய உடனடியாக கோப் சிற்றியும் ஆன்மீக தேவையைப் பூர்த்தி செய்ய மத வழிபாட்டுத் தலங்களையும் சிறார்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்ய முன்பள்ளியும் அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் காணிகள் உரிய வகையில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் கையளிக்கப்பட்டு காணி உரிமையாளர்கள் அச்சமின்றி வீடுகட்ட காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஏற்பாடுகளைச் செய்யவுள்ளேன்.

எனவே இந்தத் திட்டங்களுக்கு பொறுப்பானவர்கள் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டுமென குறிப்பிட்ட அவர் வீட்டுத்திட்டம் தொடர்பாக அரச ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லையெனவும் அவர்கள் அங்கு வசதியாக குடியமர முடியுமென்றும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட அபிவிருத்திக் குழுச் செயலாளர் க.பேர்ணாட், அபிவிருத்திக்குழுத் தலைவர் வே.இந்திரன், வீடமைப்பு அதிகார சபை வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.குரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.