பெங்களூருவில்..

படித்து முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து செட்டிலாகிவிட வேண்டும் என்பதுதான் பல மாணவர்களின் கனவாக இருக்கும். ஆனால், புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதில் வெற்றியும் பெறும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புதிய பாதைகளை தேர்ந்தெடுப்பவர்கள் அதில் காத்திருக்கும் சவால்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக தங்களுடைய திறமையையும், விடா முயற்சியையும் மூலதனமாக வைத்து ரிஸ்க் எடுப்பவர்கள் நிச்சயம் வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார்கள்.

அப்படியானவர்களில் ஒருவர் தான் வீர் சிங் மற்றும் அவருடைய மனைவி நிதி சிங். ஹரியானாவை பூர்வீகமாக கொண்டவர் வீர் சிங். பிடெக் பிரிவில் பயோடெக்னாலஜி படிப்பை முடித்த இவர் ஹைதராபாத்தில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் லைப் சயின்சஸில் எம்டெக் படிப்பை முடித்தார்.

தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தில் சைன்டிஸ்ட்டாக வீர் சிங் பணியில் சேர்ந்திருக்கிறார். நல்ல ஊதியமும் கிடைத்த நிலையில் தனது நீண்ட நாள் தோழி நிதி சிங்கை கரம் பிடித்திருக்கிறார் வீர். நிதி சிங்கும் நல்ல ஊதியத்தில் பணியில் இருந்து வந்திருக்கிறார்.

வீர் சிங்கிற்கு நீண்ட நாட்களாகவே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது.. இதனை தனது மனைவியிடமும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நிறைய விவாதங்கள் நடத்தி, அதுகுறித்து ஆய்வு செய்திருக்கின்றனர் இருவரும்.

அதன் பிறகு, வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக சமோசா கடை ஒன்றை திறப்பது என முடிவெடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் மக்களுக்கு விருப்ப உணவாக சமோசா இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருக்கிறார் வீர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டியில் சிறிய கடையில் வியாபாரத்தை துவங்கியுள்ளனர். அதன்பிறகு கடையை விரிவுபடுத்த நினைத்த இந்த தம்பதி தங்களுக்கு சொந்தமான பிளாட்டை விற்று, அதன்மூலம் தங்களது கனவை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் மாதத்திற்கு 45 கோடி ரூபாய் வரை இந்த தம்பதி சம்பாதித்து வருகின்றனர். அதாவது ஒருநாளைக்கு தோராயமாக 12 லட்ச ரூபாய் வரையிலும் கிடைக்கிறதாம். மாதம் தோறும் 30 ஆயிரம் சமோசாக்களை இந்த தம்பதியினர் விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களுடைய இந்த தொழிலில் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. விடாமுயற்சியும் சரியான திட்டமும் இருந்தால் நிச்சயமாக வெற்றிபெறலாம் என்பதை வீர் மற்றும் நிதி மீண்டும் இந்த உலகத்திற்கு நிரூபித்திருக்கின்றனர்.





