
பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியின் தோல்வியால் அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.
ஐ.பி.எல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பெங்களூர் அணி விளங்குகிறது. இதில் இந்திய அணியின் சிறப்பான வீரர்களான யுவராஜ், கோலி மட்டுமல்லாமல், வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி கண்டு பிளே–ஓப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய வலுவான அணியாக விளங்கியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியின் மோசமான செயல்பாடுக்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், நட்சத்திர வீரர்களின் ஆட்டம் வெற்றிகரமாக அமையாதது இதயத்தை நொறுக்குவதாக இருந்ததாகவும் அணி உரிமையாளர் விஜய் மல்லையா கருத்து தெரிவித்துள்ளார்.





