மன்னார்..

பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் சுகாதாரமற்ற, எலி மொய்த்த உணவுகள் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த மன்னார் நகரிலுள்ள பிரபல உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் (22.03.2023) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள் மீது எலிகள் பாய்ந்து ஓடும் காணொளியினை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு நபரொருவர் அனுப்பியுள்ளார்.

இந்த காணொளிக்கு அமைய மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையின் அடிப்படையில் உணவகம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உணவகத்துக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் முறையிடப்பட்டதற்கு அமைவாக குறித்த உணவக உரிமையாளருக்கு 70,000 ரூபா தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஒவ்வொரு குற்றத்திற்காகவும் 3 மாத சிறைதண்டனையும், 29.03.2023 வரை வியாபாரத்தை தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





