ஆட்டுக்காக உயிரைவிட்ட தொழிலாளர்கள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

573

திருவண்ணாமலையில்..

திருவண்ணாமலை அடுத்த கருத்துவாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அருண், சிவதாஸ் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரும், ஏரி கரையில் வீடு கட்டிக்கொண்டு சட்டவிரோதமாக மீன்பிடி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று பிற்பகல் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதற்காக ஏரியில் மீன் வலையை விரித்துள்ளனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரின் ஆடு எதிர்பாராதவிதமாக மீன் வலையில் சிக்கிக் கொண்டுவிட்டது. இதனை அறிந்த திருவேங்கடம், தனது ஆட்டை காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கினார்.

மீன் வலைக்குள் சென்றபோது எதிர்பாராத விதமாக திருவேங்கடம் மீன் வலையில் சிக்கிக் கொண்டார். பின்னர் தன்னை காப்பாறுமாறு கூச்சலிட்டுள்ளார். ஏரிக்கு அருகாமையில் செங்கல் சூலையில் பணி செய்திருந்த ரமேஷ் என்பவர் கூச்சல் சத்தத்தை கேட்டு உடனடியாக ஏரி பகுதிக்கு விரைந்து வந்துள்ளார்.

அப்பொழுது திருவேங்கடம் மீன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது காப்பாற்றச் சென்ற ரமேஷும் திருவேங்கடமும் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் திருவேங்கடம், ரமேஷ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் மீன் வலையை விரித்த அருண், சிவதாஸ் மற்றும் சங்கர் ஆகிய மூன்று பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.