மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு டில்லி சென்றடைந்தது : ஜெயலலிதா, ரஜினி மோடி நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள்!!

283

Mahintha

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சற்று முன் டில்லியை சென்றடைந்தனர்.

ஜனாதிபதியுடன் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் சென்றுள்ளனர்.

டில்லி விமான நிலையத்தில் வைத்து இலங்கை தூதரக அதிகாரிகளால் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அவர்ளது தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் டில்லியிலும் ஆம் ஆத்மி கட்சி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக எதிர்ப்பின் காரணமாக மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நட்சத்திர நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டில்லி செல்ல மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் நேற்று அவரது வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மோடி பதவியேற்பில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

எனினும் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருந்த கட்சித் தலைவர்கள் எவரும் மோடி பதவியேற்பில் பங்கேற்கின்றனரா என இன்னும் உறுதியான தகவல் வெளிவரவில்லை.