இளம் வயதில் மலர்ந்த காதல்.. எதிர்த்த பெற்றோர்.. 60 வருடம் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

482

பிரிட்டனில்..

பொதுவாக இரு மனதுக்கு இடையே உருவாகும் காதல் என்பது மொழி, மதம், வயது என பல விஷயங்களை தாண்டி வரும் என ஒரு கூற்று உண்டு. இருவர் இடையே காதல் உருவாகி விட்டால் எப்படியாவது நிலைத்து நின்று தங்கள் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என்றும் அவர் நினைப்பார்கள்.

அதே வேளையில், மறுபக்கம் ஏதாவது சில காரணங்களால் காதல் கைகூடாமல் கூட போகலாம். அப்படி இருக்கையில், சுமார் 60 ஆண்டுகள் கழித்து காதல் காரணமாக நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் லென் ஆல்பிரைட்டன். இவருக்கு தற்போது 78 வயதாகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் ஜீனெட் ஸ்டீர் (வயது 78). இவர்கள் இருவரும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

1963 ஆம் ஆண்டு செவிலியர் பயிற்சியின் போது அவர்கள் சந்தித்த போது காதல் உருவாகியது. லென் மற்றும் ஜீனெட் ஆகியோரின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் பிரியும் சூழலும் உருவானது.

மேலும் அந்த சமயத்தில் இருந்த சட்டங்கள் அவர்கள் இளம் வயதில் இணைந்து வாழ தடையாக இருந்ததால் காதலை அவர்களால் தொடர முடியவில்லை என தகவல்கள் கூறுகின்றது.

ஜீனெட்டை பிரிந்த லென், ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றதுடன் சில காலங்கள் கழித்து வேறொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

இதனிடையே, கடந்த 2015 ஆம் ஆண்டு நீண்ட நாள் திருமண வாழ்க்கை முடிவடைந்ததையடுத்து மீண்டும் ஜீனெட்டை தொடர்பு கொள்ளவும் லென் முயன்றதாக தகவல்கள் கூறுகின்றது.

என்றாலும் தன்னை நினைவில் கொண்டிருப்பாரா என்ற கவலையுடன் வாக்காளர் பட்டியலில் ஜீனெட்டின் முகவரியை தேடி பிடிக்கவும் நியூபோர்ட் சென்றார் லென். இறுதியில் ஜீனெட் இல்லத்தை கண்டுபிடித்து அவரை நேரில் சந்தித்தார் லென்.

முதலில் அடையாளம் காண முடியாமல் தவித்த ஜீனெட், பழைய நினைவுகளை லென் நினைவு கூர்ந்ததும் அறிந்து அதிர்ச்சியிலும் உறைந்து போனார். அப்போது ஜீனெட் கணவர் இருந்த சூழலில், இரண்டு ஆண்டுகள் கழித்து புற்றுநோயால் அவர் உயிரிழந்து போயுள்ளார்.

இதனையடுத்து, மீண்டும் லென் மற்றும் ஜீனெட் ஆகியோர் டேட்டிங் செய்ய தொடங்கிய சூழலில், சமீபத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து சேராமல் போனவர்கள் தற்போது இணைந்துள்ளது இணையவாசிகள் மத்தியில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.