தலைமன்னாருக்கு நியமனம் பெற்றுச் சென்ற ஒரு சிங்களப் பெண் மருத்துவரின் கதை!!

2754

தலைமன்னாரில்..

தலைமன்னாருக்கு நியமனம் பெற்று சென்ற சிங்களப் பெண்ணான மருத்துவர் பாக்யா வீரவர்தன அவர்கள் கடந்துச் சென்ற பாதை மற்றும் தமிழ் மக்கள் அவர் மீது வைத்த மதிப்பை பற்றி அவரே தெரிவித்த ஒரு கதை.

மருத்துவர் பாக்யா வீரவர்தன நியமனம் பெற்று தனது சொந்த ஊரை விட்டு 328 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலைமன்னாருக்கு அப்பா மற்றும் அப்பாவுடன் சென்றார்.

நடப்பட்ட இடத்தில் பூக்கும் (Bloom where you are planted) கோட்பாட்டுடன் வாழும் தலைமன்னார் என்றதும் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை; மொழித் தடை மாத்திரமே அவருக்கு இருந்துள்ளது.

தலைமனனாருக்கு செல்வதற்கு முன் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய எனக்கு இருந்தது இரண்டே நாட்கள் மட்டுமே அவருக்கு இருந்துள்ளது. அப்பாவுடன் முழு நகரத்தையும் ஒரு சுற்று சுற்றி சமைக்கும் பாத்திரங்கள், கரண்டி, முட்கரண்டி, வாளி, தட்டு முட்டு சாமான்கள் என அனைத்தையும் வாங்கியது தலைமன்னார் என்றதும் எத்தியோபியாக்கு போவதுபோல் இருந்ததால்தான்.

ஒரு லாரி கொள்ளக்கூடிய சாமான்களை காரில் நிறைத்துக் கொண்டு விடியற்காலை 3:00 மணிக்கு புறப்படும் பொழுது ‘ பேசாம ஜேபுரவில் (ஜயவர்தனபுர வைத்தியசாலை) சேர்ந்து கொள்ளாமல், என்ன மண்ணாங்கட்டிக்கு தலைமன்னாருக்கு போகணும்’ என்று தோன்றாமல் இல்லை.

ஆனால் இதுதான் எனக்கு உரிய இடம், எனக்கு விதிக்கப்பட்ட இடம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, ஒருவித போராட்ட மனதுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த எனக்கு பாதையின் இருபுறமும் தெரிந்த பனைமரங்கள் ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தன.

வேலையில் சேர்ந்த முதல்நாள் ஒரு வித்தியாசமான உணர்வு என்னை ஆட்கொண்டது. எல்லோரும் என்னை வேற்றுகிரகவாசி போல் பார்த்தார்கள். தொடர்ந்து பெற்றோரை அங்கு வைத்துக் கொள்ள முடியாததால் மூன்று நாட்கள் ஓட்டலில் தங்கியிருந்துவிட்டு மருத்துவமனை விடுதிக்கு இடம் பெயர்ந்தேன்.

அம்மாவை ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பிவந்து என்னுடன் தங்கிவிட விரும்பினார் அப்பா; முடிந்தால் என்னை திரும்ப கூட்டிக்கொண்டு போக. பணியாளர்கள் உடைந்த சிங்களத்தில் தட்டுத்தடுமாறி என்னுடன் பேசத் தொடங்கினார்கள்.

நானும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பழகி, மொழித் தடை நீங்கிய போது, நான் அந்த ஊரை நேசிக்க தொடங்கினேன். அந்த அப்பாவி மக்கள் மீது எனக்கு மேலும் மேலும் இரக்கமே தோன்றியது.

கடலுக்குச் சென்று எதையாவது பிடித்துக்கொண்டு வந்து ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதைத் தவிர அவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. வாழ்க்கை விசித்திரமானது. அது நம்மை நாம் நினைக்காத இடங்களில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

அந்த மக்களைப் பார்த்து நான் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை தேற்றிக்கொண்டேன். பல்லாண்டு காலம் போரில் அடிபட்ட அவர்கள், சிங்களவர்களை வினோதமாக நோக்கினார்கள். எங்களை நேசிக்கா விட்டாலும், எங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கவில்லை.

தினம் தினம் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் அவர்களின் அவல வாழ்க்கையின் சோகத்தை மேலும் மேலும் அறிந்து கொண்டபோது நான் அவர்களுடன் இன்னும் நெருக்கமாக விரும்பினேன்.

மண்ணெண்ணெய் விளக்கெரியும் பனையோலை குடிசையின் கூரையின் ஓட்டை வழியாக தெரியும் வானத்தைப் பார்த்து சிரிப்பதன்றி அழுவதற்கு அவர்களிடம் கண்ணீர் இருக்கவில்லை.

நான் வாழ்க்கையில் கற்றிருந்த பெரிய பாடம் எப்போதும் பயம் இருந்தால் அதனைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது. எவ்வளவு துயர் வந்தாலும் அதன் மத்தியில் தளராமல் இருப்பது எப்படி என்பதை நான் அங்கு கற்றுக் கொண்டேன்.

நாம் எல்லோரும் மனிதர்கள். நம் மனங்களில் ஏன் இந்த இன வேற்றுமை. நானும் அவர்களில் ஒருத்தி என்று எண்ண முயன்றேன். வெசாக் மாதத்தின் ஆரம்பத்திலேயே வீடு சென்று திரும்பும்போது வெசாக் கூடு செய்வதற்கு சிறு மூங்கில் கிளைகளை வெட்டி எடுத்து வந்தேன்.

எல்லோரும் சேர்ந்து தாமரை வடிவில் மூன்றும், சாய்சதுர வடிவில் பத்தும், பெரிய வெசாக் கூடு ஆறு என மருத்துவமனைக்கு முற்றத்தில் இருந்த வேப்ப மரத்தில் தொங்க விட்ட போது எல்லோருடைய முகங்களிலும் அத்தனை மகிழ்ச்சி.

வெசாக் தினத்தன்று வண்ண வண்ண மின் விளக்குகளை தொங்கவிட்டு அதை பார்க்க முழு ஊரும் சேர்ந்து வந்தபோது எனக்கு ஏற்பட்டது விவரிக்க முடியாத ஒரு உணர்வு.

அங்கு இருந்த இரண்டு வருடங்களும் அதை தொடர்ந்து செய்தேன். வெசாக் தினத்தன்று பணியாளர்கள் அனைவருக்கும் உணவு பொதி கிடைத்ததால் மருத்துவமனை உணவை பார்சல் செய்து ஊரில் உள்ள ஏழை மக்களுக்கு வினியோகிக்க தீர்மானித்ததை இன்று நினைத்தாலும் மகிழ்ச்சி பொங்குகிறது.

அதன் பிறகு என்னையும் முந்திக்கொண்டு எஞ்சிய உணவை ஏழைகளுக்குக் கொடுக்க பார்சல் செய்வதில் பணியாளர்கள் முனைப்பாக இருந்தார்கள். வேசாக், பொசொன் காலங்களில் நடத்தப்படும் தான கூடங்கள் (தன்சல்) பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

வெசாக், பொசொன் மற்றும் பேரிடர் காலங்களில் உலர் உணவு பொதிகள் செய்ய முனைப்புடன் எனக்கு உதவினார்கள். அனைத்து சமூக சேவைகளுக்கும் தங்களால் இயன்றளவு உதவினார்கள், பங்குபற்றினார்கள்.

நத்தார் பண்டிகையின்போது முழு மருத்துவமனையும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அலங்கரித்து, கிறிஸ்மஸ் தின விருந்துக்கும், பொங்கல் பண்டிகையின் போது கோலமிட்டு பூஜை செய்து எல்லோரும் சேர்ந்து பொங்கல் உண்ணவும், சரஸ்வதி பூஜை, மடு தேவாலய புனித யாத்திரை என அனைத்துக்குமென நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டோம்.

ஜனவரி முதல் நாளன்று பால் பொங்கி, மேசை நிறைந்த பாற்சோறை கட்டசம்பலுடன் எல்லோரும் சேர்ந்து உண்டோம். அன்று என்னுடன் சேர்ந்து சிங்கள சடங்குகளை செய்ய அவர்கள் தயங்கவில்லை. வந்திருந்த நோயாளிகளுக்கும் பாற்சோறு பரிமாற நாங்கள் மறக்கவில்லை. மருத்துவமனை எனது வீடானது. பணியாளர்கள் எனது உறவினர்கள் ஆனார்கள்.

கோவில் மற்றும் தேவாலயத்திற்கு யார் வந்தாலும் அவர்களை சாதி, மத, இன பேதமின்றி குருமார்கள் ஆசீர்வதித்தார்கள். எங்கிருந்தாலும் ஓடி வந்து எனது பூஜையை முதலில் செய்யுமளவுக்கு அந்த இதயங்கள் எனக்கு நெருக்கமாயின.

எந்த வேறுபாடுமின்றி மடு மாதவினுடைய, அம்மனுடைய அருள் எனக்குக் கிட்டியது. அதுபோல்தான் அங்கு உருவான சில சகோதர உறவுகள். என்னை தங்களது சொந்த சகோதரியைப் போல், மகளைப் போல் அன்பு செலுத்திய, நான் ஊருக்கு புறப்படும்போது எப்படி செல்கிறேன் என்று கவனித்துப் பார்த்துக் கொண்ட, ஊருக்கு செல்ல முடியாமல் போகும்போது மனநிலை சரியில்லாமல், முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு மன அழுத்தம் ஆகியிருக்கும் என்னை அந்த தீவு வாழ்க்கையில் நான் சலிப்புறாமல் இருக்க அனைத்தையும் செய்த அந்த இனிமையான பந்தங்கள் என்றென்றும் என் நினைவேடுகளில் நிறைந்திருக்கும்.

அந்த உறவுகள், நட்புகள் என்றும் தொடரும். என்னையறியாமல் இரண்டு வருடங்களும் 7 மாதங்களும் ஓடி விட்டன. எனது இடமாற்றம் குறித்து அறிந்ததும் எனது பணியிடமாற்றத்தை நிறுத்தக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு மனுவில் கையெழுத்திட்டதன் மூலம் எனது கடமையை சரிவர செய்திருக்கிறேன் என்பது எனக்கு நிரூபணமானது.

சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இறுதியாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், கண்ணீர் நிறைந்த விழிகளுடன் இரு கைகளையும் கூப்பி என்னை ஆசீர்வதித்தபோது உடைந்து போனேன்.

சிங்களப் பெண்ணான என்னை இந்த தமிழ், முஸ்லிம் மக்கள் இவ்வளவு நேசித்திருக்கிறார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. இந்த ஊரில் வைத்தியரின் பணிகளையும் தாண்டி சில தொண்டுகளை செய்யவும், இந்த மக்களுக்கு சிறிதளவாவது நிவாரணம் அளிக்கவும் முடிந்ததையிட்டு நான் என்றும் மகிழ்ச்சியடைவேன்.

அதற்கிடையில் யோகச்சந்திரனுடைய பிள்ளைகளின் மற்றும் வனிதாவின் தலை விதிகளை மாற்ற முடிந்தது விசேடமான விடயங்கள். அந்த முகங்களில் நான் கண்ட எதிர்பார்ப்பு என்றும் என் நினைவில் அழியாது இருக்கும்.

அன்பான வடக்கிலும் தெற்கிலும் வாழும் நாம் அனைவரும் மனிதர்களே என்று எனக்கு சொல்லித்தந்த அந்தப் பனையோலை வேலிகளின் விளிம்பில் உருவான அந்த பந்தம் என்றென்றும் என் இதயத்தில் உயிர்த்திருக்கும். என சிங்கள பெண் மருத்துவர் பாக்யா வீரவர்தன தலைமன்னாரில் உள்ள தமிழ் மக்களின் குணங்கள் பற்றி பதிவிட்டுள்ளார்.