கணவனின் கொடுமை தாங்காமல் திருமணமான 4 மாதத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

2457

மதுரையில்..

மதுரை திருப்பாலை பசும்பொன் நகரைச் சேர்ந்த அருணாதேவி என்ற இளம்பெண்ணுக்கும், திருமங்கலத்தை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.



பெற்றோர் பார்த்து திருமணம் நடத்திவைத்தனர். திருமணத்தின் போது 38 பவுன் தங்க நகையினை அருணாதேவிக்கு அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு நாகையாபுரத்தில் அருண்குமார்- அருணாதேவி தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அருணாதேவிக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அருணாதேவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

ஆனால் அவரது கணவர் அருண்குமாரோ, வலிப்பு நோயுடன் உள்ள பெண்ணுடன் வாழ முடியாது என தகராறில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு பேசியும் மாப்பிள்ளை தகராறு செய்ததால் அருணாதேவி தனது பெற்றோருடன் சென்றுவிட்டார். அதன்பிறகு மனைவி அருணாதேவியுடன் செல்போன் மூலம் பேசுவதை அருண்குமார் திடீரென நிறுத்திக் கொண்டார்.

இதுகுறித்து அவரிடம் சென்று பெண்ணின் வீட்டார் கேட்டபோது, மீண்டும் சேர்ந்து வாழவேண்டும் என்றால் 10 லட்ச ரூபாய் வாங்கி வரும்படி சொன்னதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கணவரைப் பிரிந்த மனவேதனையில் இருந்த அருணாதேவி, சேர்ந்து வாழ வரதட்சணை பணம் கேட்ட கணவரின் செயலால் மேலும் வேதனை அடைந்தார்.

இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருணாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலை போலீஸார் அருணாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் வரதட்சணை கேட்டு தனது மகளை தற்கொலைக்கு தூண்டிய அருண்குமார், அவரது தந்தை ராஜகோபால் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெருமாள் புகார் அளித்துள்ளார். திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கேட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.