மனைவியின் வளைகாப்பிற்கு சென்ற கணவனுக்கு நடந்த விபரீதம்!!

1374

வாலாஜாபாத்தில்..

மது போதையாலும், நிமிஷ நேர கோபத்தாலும் மூன்று குடும்ப பெண்கள் வாழ்க்கையை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணி, பிரசவத்திற்காக சொந்த ஊரான கேரளாவுக்கு காஞ்சிபுரம், வாலாஜாபாத்தில் இருந்து சென்றிருக்கிறார்.

அவருடைய சீமந்த விழாவில் கலந்து கொண்டு, மனைவியின் பிரசவம் வரையில் உடனிருந்து பார்த்துக் கொள்வதற்காக வாலாஜாபாத்தில் இருந்து கிளம்பிச் சென்ற கணவர், தனது நண்பர்களுக்கு கிளம்பும் முன்பாக மது விருந்து கொடுத்திருக்கிறார்.

நண்பர்களுடன் மது அருந்தியது, அவரது உயிரையே பறித்து விட்டது. கர்ப்பிணி மனைவி, கணவன் குத்திக் கொலைச் செய்யப்பட்ட செய்தி கேட்டு கொடுமை நிகழ்ந்துள்ளது.

வளைகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்த உறவினர்கள் எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நண்பர்களுடனான மது போதை அத்தனை பேர் வாழ்க்கையையும் சீர்குலைத்து விட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி நேரு நகரைச் சேர்ந்தவர்கள் வினித் குமார் (25) மற்றும் பார்த்திபன்(25). அதே பகுதியில் வசித்து வரும் இருவரும் நண்பர்கள்.

கேரளாவில் இருக்கும் தனது கர்ப்பிணி மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வினித் குமார் தயாராகி வந்த நிலையில், தனது நண்பர் பார்த்திபனுடன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பார்த்திபனின் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் சின்ராஜ் அங்கு வந்தார். சின்ராஜ், பார்த்திபன் இருவரும் சேர்ந்து வினித் குமாரை கடுமையாக தாக்கி மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த வினித் குமார் ரத்த வெள்ளத்தில் துடித்தப்படியே சத்தம் போட்டார்.

வினித் குமாரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் வினித் குமார் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வினித்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாலாஜாபாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மது பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய பார்த்திபன், சின்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை பார்க்க கேரளாவுக்கு செல்ல இருந்த நிலையில் வினித்குமார் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.