நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

504

தமிழகத்தில்..

தமிழகத்தின் நெய்வேலி அருகே நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த உத்திரபாதி என்பவர் தனது பணிக்காக நெய்வேலியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.



இவரது மகளான நிஷா கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 399 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் நீட் தேர்வு எழுதுவதற்காக நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து முழு நேரப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

மே மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்து உள்ளார். இதற்காக பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட தேர்வுகளில் அவர் சரியான மதிப்பெண்கள் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷா நேற்று ( ஏப்ரல் 5 ) மாலை வகுப்பு இல்லாத நிலையிலும் வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு நெய்வேலியிலிருந்து பேருந்து மூலம் வடலூருக்கு சென்றுள்ளார்.

வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் அவர் பெங்களூரிலிருந்து கடலூர் நோக்கி வந்த ரயில் முன்பு தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் சிதைந்து போனது.

இதனை பார்த்த எஞ்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு கடலூர் முதுநகர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிஷாவின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காவல் துறையினர் விசாரணையில், நீட் பயிற்சி மையத்தில் நடந்த மாதிரி தேர்வில் அவர் குறைவான மதிப்பெண் எடுத்தது தெரிய வந்துள்ளது. அதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.