2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

406

விருதுநகரரில்..

விருதுநகர் அருகே இரு மகள்களை தூக்கில் தொங்கவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் அருகே உள்ள பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (42). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெத்தம்மாள் (35).



இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பாண்டிச்செல்வி (6), கார்த்திகாயினி (3) என்ற இரு மகள்கள் உண்டு. மூத்த மகள் பாண்டிச்செல்வி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஒரு மாதமாக பெத்தம்மாள் பயந்தது போலவும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டுள்ளார். இதனால், சரவணக்குமார் தனது மனைவி பெத்தம்மாளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அவ்வப்போது அழைத்துச்சென்று கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சரவணக்குமார் இன்று காலை தோட்டத்திற்கு விவசாய கூலிவேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த சரவணக்குமார் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளுடன் பெத்தம்மாளும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பெத்தம்மாள் சடலத்தையும் இரு குழந்தைகள் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெத்தம்மாள், தனது இரு மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இருப்பினும், இச்சம்பவத்திற்கு வேறு ஏதும் காரணம் உண்டா என ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.