கண்டுகொள்ளாத மோடி : கடும் அதிருப்தியில் விஜயகாந்த்!!

239

Vijayakanth

மோடி தேர்தல் பிரசாரத்தின் போது, தனிப்பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம், இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி சபையில் இடம் அளிப்போம் என்று உறுதியளித்தார்.

மோடியின் இந்த அறிவிப்பால் கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்தன. ஒரு வேளை மோடி அலையில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்றாலும் நமக்கும் மந்திரி சபையில் இடம் கிடைக்கும் என்று கூட்டணி கட்சி பிரபலங்கள் அடிமனதில் ஆசையுடன் இருந்தனர்.

எதிர்பார்த்தது போல் மோடி தனி மெஜாரிட்டி பெற்று சாதனை படைத்தார். இருந்தாலும் சொன்ன வாக்கை காப்பாற்றுவார் மோடி என்ற நம்பிக்கையில் பல கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லி சென்று முகாமிட்டனர்.

கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா) தர்மபுரியில் அன்புமணி (பா.ம.க) ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரிய மாநிலமான தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஒரே ஒரு எம்.பி இருப்பதால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மந்திரி பதவி உறுதி என்று தேர்தல் முடிவு வெளியானதுமே எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில் எதிர்பாராத தோல்வியை தழுவினாலும் மந்திரி பதவி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு கூட்டணி கட்சிகளிடம் இருந்தது. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் இரு நாட்களுக்கு முன்பே டெல்லி சென்று விட்டனர்.

பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி வழங்கப்படுவதால் பா.ம.க.வுக்கும் மந்திரி பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் பதவி கிடைக்காததால் அன்புமணி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

கபினட் அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இணை மந்திரி பதவியாவது கிடைத்தால் போதும் என்று பா.ஜனதா தலைமையை அணுகி இருக்கிறார்கள். ஆனால் அன்புமணி சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்த போது நடந்த முறை கேடுகள் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் இப்போது மந்திரி பதவி தர இயலாது. வழக்கு முடியட்டும் பின்னர் பரிசீலிக்கலாம் என்று பா.ஜனதா மேலிடம் கையை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இது அன்புமணிக்கு ஏமாற்றத்தையும், ராமதாசுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பா.ஜனதா கூட்டணிக்கு எள்ளளவு கூட விருப்பமில்லாத ராமதாசை சமாதானப்படுத்தி கூட்டணி கொடி பிடித்தவர் அன்புமணி எவ்வளவு சிரமப்பட்டு கூட்டணிக்கு முயற்சி எடுத்தேன் என்பது தெரிந்தும் பா.ஜனதா நம்மை கை விட்டு விட்டதே என்ற விரக்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

பிரதான கூட்டணி கட்சியான தே.மு.தி.க. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவில் இருந்து மீளவும், வருங்காலத்தில் நெருக்கடி இல்லாமல் கட்சியை கட்டிக்காக்கவும் டெல்லியில் பிரதிநிதி வேண்டும் என்று விஜயகாந்த்த நினைக்கிறார்.

எனவே மைத்துனர் சுதீசுக்கு மந்திரி பதவி அல்லது ராஜ்யசபா எம்.பி.பதவி வேண்டும் என்று பா.ஜனதா தலைமையை வலியுறுத்தி இருக்கிறார்.

கண்டிப்பாக ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் இருந்தார். எனவே பதவி ஏற்பு விழாவுக்கு மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீசுடன் டெல்லி புறப்பட்டு சென்றார். பிற்பகல் வரை பதவி பற்றி அறிவிப்பு வராததால் பதவி ஏற்பு விழாவுக்கு செல்லாமல் ஓட்டலிலேயே இருந்து விட்டார். பதவி வழங்காததால் விஜயகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மனைவி பிரேமலதாவுக்காவது மத்திய அமைச்சருக்கு இணையான ஏதாவது ஒரு பதவி வேண்டும் என்று விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. டெல்லியிலேயே முகாமிட்டுள்ள விஜயகாந்த் இன்று மோடியை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.