செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியில் ஏழுமலை (32) – பிரமிளா (29) தம்பதி வசித்து வந்தனர். இதில் பிரமிளா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த மூன்றாம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த நான்காம் தேதி அரசு மருத்துவமனையில் வைத்து பிரமிளாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் மூலம் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அதனைத் தொடர்ந்து தாய் மற்றும் சேய் இருவரும் வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மறுநாள் மாலை சுமார் 4 மணியளவில் பிரமிளாவிற்கு திடீரென வயிறு வீங்கி உள்ளது.
அதன் காரணமாக அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி மருத்துவர்கள் அறுவை அரங்கத்திற்கு அவரை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தொடர்ந்து ஆறாம் தேதி பிரமிளாவை அவரது உறவினர்கள் பார்க்க சென்றபோது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
அது குறித்து மருத்துவர்களிடம் அவரது உறவினர்கள் கேட்டபோது உரிய பதில் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மேல் அவர் கண் விழிக்கவில்லை. தொடர்ந்து நேற்று பிரமிளா உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு கதறி அழுதனர். பலரும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் பயிற்சி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் அந்த பெண் உயிரிழந்து விட்டதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறி வாக்குவாதம் செய்தனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து பிரமிளாவின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் வெகு நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.