வவுனியாவில் புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!!

1152

மக்கள் எதிர்ப்பு..

கிராமத்திற்கு செல்லும் பாதையை மறித்து அனுராதபுரம் – வவுனியா புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு விஜயபாகு கம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, திருத்த வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று (11.04) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



வவுனியா, ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம கிராமத்தில் 50 வரையிலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கடந்த 32 வருடங்களாக பயன்படுத்தி வந்த வீதியை மறித்து புகையிரதப் பாதை நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கிராம மக்களை அப் பாதையில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களத்தினர் கூறியிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 32 வருடங்களாக பயன்படுத்தி வரும் பாதையை தாம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் போக்குவரத்திற்கு ஏற்றதாக புதிய தண்டவாளங்களை அமைக்குமாறு அப் பகுதி மக்கள் புகையிரத திணைக்களத்தினரிடம் கோரினர். அதற்கு அவர்கள் இணங்காமையால் புகையிரதப் பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

பொலிசார் தலையிட்டு குறித்த விடயம் தொடபில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், அம் மக்களிள் கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்குமாறும் கோரினர்.

இதனால் அனுராதபுரம் – வவுனியா வரையிலான புகையிரதப் பாதை திருத்தப் பணிகள் ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களும் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, தமக்கான தீர்வு கிடைக்காவிடின் தாம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.