சின்னடம்பன்..
வவுனியா வடக்கில் வேலிக்கு பாய்ச்சிய மின்சாரத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பதில் நீதிவான் தி.திருவருள் இன்று (11.04) சென்று பார்வையிட்டிருந்தார்.
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு வேலி போடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த வேலிக்கு வீட்டில் இருந்து முறையற்ற வகையில் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மரம் வெட்டுவதற்காக குறித்த வேலி ஊடாக சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பவராவார். குறித்த பகுதியில் மரம் வெட்டுவதற்காக மரணமடைந்த இளைஞருடன் சிலர் சென்ற போது குறித்த காணி உரிமையாளரிடம்,
வேலிக்கு மின்சாரம் செலுத்தப்பட்டுள்ளதா எனக் கேட்டதாகவும், இதன்போது அவர் இல்லை எனத் தெரிவித்த நிலையிலேயே குறித்த இளைஞன் வேலியால் சென்ற போது மின்சாரம் தாக்கி மரணித்ததாக இறந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கனராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் வவுனியா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் தி.திருவருள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், இது தொடர்பான முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், முறையற்ற வகையில் மின்சாரம் செலுத்தியமை மற்றும் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு,
வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையால் குறித்த வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.