திருவண்ணாமலையில்..
குடும்ப தகராறு காரணமாக மகன்களை கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை அடுத்துள்ளது வட்ராபுத்தூர்.
இங்கு சின்னராசு (36) என்பவர் வசித்து வருகிறார். கனலாபாடி கிராம ஊராட்சி செயலாளராக இருக்கும் இவருக்கும், அதே பகுதியை சூர்யா (32) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. சூர்யா நர்ஸாக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு லட்சன் (4), உதயன் (1) என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த சூழலில் வழக்கம்போல் கணவன் – மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அது கடந்த சில நாட்களாக கூடுதலாக காணப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அடிக்கடி மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அதே போல் சம்பவத்தன்றும் காலையில் கணவன் – மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் சின்னராசு, தனது மனைவியை திட்டியுள்ளார்.
மேலும் இவர்களுக்குள் நீண்ட நேரமாக வாக்குவாதம் சென்றுள்ளது. சண்டையை தொடர்ந்து சின்னராசு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு நேரத்தில் சுமார் 10 மணியளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மனைவி, மகன்கள் யாருமில்லை. எனவே இவர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதோடு தொடர்ந்து பல இடங்களில் தேடியும் உள்ளார்.
தொடர்ந்து அவரது மொபைல் போனை தொடர்பு கொண்டபோதும் கூட, அதனை யாரும் எடுக்கவில்லை. இதனால் மேலும் பதறிப்போன சின்னராசு தொடர்ந்து தீவிரமாகி தேடி வந்தார். அப்போது அவர் வீட்டுக்கு சிறிது தூரம் உள்ள கிணறு பக்கத்தில் மனைவி சூர்யாவின் மொபைல் போன் இருந்துள்ளது. இதனை கண்டு பதறிய கணவர், உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
மேலும் போலிஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்தவர்கள் உடனே கிணற்றை இறங்கி தேடினர். சுமார் 3 மணி நேரம் முயற்சிக்கு பிறகு மனைவி சூர்யா, 2-வது மகன் உதயன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டது.
தொடர்ந்து மூத்த மகன் சடலத்தை தேடுவதற்காக தண்ணீர் முழுவதையும் மின்மோட்டார் மூலம் வெளியேற்றி, 11 மணி நேரத்துக்கு பிறகு லட்சன் சடலமும் மீட்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மகன்களை கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.