பலே மூளை.. மோசமான வேலை.. குடும்பத்தையே கம்பி எண்ண வைத்த போலீஸ்காரர்!!

3014

காஞ்சிபுரத்தில்..

ஆன்லைன் சூதாட்டத்தில் கைதேர்ந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த போலீஸ்காரர், பெரிய அளவில் முதலீடுகளைப் பெற்றுக்கொண்டு கம்பிநீட்டியதால், அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தோடு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது.



காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அருண். போக்குவரத்துக் போலீஸ்காரர் ஆவார். இவர் ஆன்லைன் சூதாட்டங்களில் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை சர்வ சாதாரணமாக வென்றாராம். இதனால் இவரை காசு கட்டி பலரும் விளையாட வைத்திருக்கிறார்கள். அப்படி விளையாட வைத்தவர்களுக்கு நிறைய பணத்தை சம்பாதித்து கொடுத்தாராம்.

இதனால் இவரை நம்பி பலரும் கோடிகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். இதனிடையே தன்னுடைய மனைவி மகாலட்சுமி, சகோதரர்கள் சகாய பாரத், இருதயராஜ், கசாய பாரத்தின் மனைவி சவுமியா, இருதயராஜ் மனைவி ஜெயஸ்ரீ மற்றும் பெற்றோர்கள் என ஒவ்வொருவருவரும் வெவ்வேறு தொழில் செய்து வருகிறோம் என்று நட்பு வட்டத்தில் கூறியிருக்கிறார்.

குறிப்பாக தன்னுடைய மனைவி மகாலட்சுமி தொழில் செய்து அதிக லாபம் பெறுகிறார் என்றும் இதில் முதலீடு செய்தால் 5 சதவீதம் தொகையை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாகவும் கூறியிருக்கிறார்.

இதை நம்பி காஞ்சீபுரம் விளக்கடி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் சங்கரன் (29) என்பவர் 10 தவணைகளில் ரூ.3 கோடியே 10 லட்சம் ஆரோக்கிய அருணிடம் கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல் காஞ்சீபுரத்தை சேர்ந்த சுகுமார் என்பவரிடம் ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கி தருவதாக கூறி ரூ.3 கோடியும், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் யுவராஜ் என்பவரிடம் இருந்து ரூ.5 கோடியே 5 லட்சம், போலீஸ்காரர் மனோகர் என்பவரிடம் இருந்து ரூ.11 கோடியே 5 லட்சம், காஞ்சீபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் இருந்து ரூ.2 கோடியே 5 லட்சம் என சுமார் ரூ.22 கோடிக்கு மேல் பலரிடம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு வகையான தொழில் செய்வதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாணையில் இதேபோன்று பலரிடம் பணமோசடியில் ஆரோக்கிய அருண் ஈடுபட்டதும், அதற்கு உறுதுணையாக அவரது குடும்பத்தினர் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பணமோசடியில் ஈடுபட்டதாக இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத், அவரது மனைவி சவுமியா, தாய் மரியா செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சாதாரண போக்குவரத்து போலீஸ்காரர் எப்படி இத்தனை கோடி வசூலித்திருக்க முடியும் என்று சந்தேகமாக விசாரித்த போலீஸார், முதலீட்டாளர்களுடன் அவர் பேசிய கான்ஃபரன்ஸ் காலின் ஆடியோ ஒன்றைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ஆடியோவில் அருண் கூறுகையில், “உங்களுக்கே நன்றாக தெரியும்… எனக்கு 20 சதவிகிதம் வட்டி வந்தப்ப உங்களுக்கு 17 சதவிகிதம் வரைக்கும் வட்டி கொடுத்ததிருக்கிறேன். இப்ப இன்கம்டாக்ஸ், இ.ஓ.டபிள்யு எல்லாம் ரொம்ப ‘டைட்’ செய்யுறாங்கள். ஒரு செக்கை மாத்துறதுக்கே அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. நேத்துக்கூட ஒரு கோடி ரூபா செக் கொடுத்தேன்.

பேங்க் மேனேஜர் என்ன காரணம் என்று கேட்கிறார். அவர் கேட்கிறது நியாயம்தானே… ஆயுசு முழுக்க வேலை பார்த்தாலும் ஒரு போலீஸ்காரனால ஒரு கோடிகூடச் சேர்க்க முடியாது.

ஆனா, நாங்க இதுவரைக்கும் ரிட்டர்ன் பேமென்ட் மட்டுமே கிட்டத்தட்ட 200 – 300 கோடி கொடுத்துருக்கோம். அதனால, முதலீடு செய்தவங்ககிட்ட எக்ஸ்ப்ளெயின் பண்ணுங்க. ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ் மாதிரி நான் இதுவரை யாரையும் ஏமாத்தலை… ஏமாத்தவும் மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் சூதாட்டம் மட்டுமன்றி பிட்காயின், மணி எக்ஸ்சேஞ்ச் என பலவிதமான ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகச் சொல்லியே இத்தனை கோடி முதலீடு பெற்று மோசடி செய்தாராம்.

இதனிடையே போலீஸ்காரர் ஆரோக்கிய அருண் 2021-லிருந்தே அவர் முதலீடு பெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம்தான் பிரச்னை ஏற்பட்டதாம். பலருக்கும் பணம் தரவில்லையாம்.

2021, டிசம்பர் மாதம் முதல் காவல்துறையினரிடமும் பொதுமக்களிடமும் முதலீடு எனக் கூறி அருண் பணம் வசூலிக்கத் தொடங்கியதாகவும், கைதுசெய்யப்பட்ட அருணின் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு அவரின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்திருப்பதால், அவர்களையும் கைதுசெய்து, அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து போலீசார் ஆய்வுசெய்துவருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பணம் எப்படியாவது கிடைக்கும் என்று நம்பி போராடி வருகிறார்கள்.