குமரியில்..
குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஜான்சன் என்பவரது மகள் ஜெனிலா கோபிக்கும் (23), கருங்கல் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சேம் மரியதாஸ் பெங்களூரூவில் தங்கி பணியாற்றி வந்ததால், மனைவி ஜெனிலாவும் கணவருடன் பெங்களூரூவுக்கே சென்று விட்டார். இதனிடையே, சேம் மரியாதாஸுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 11ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெனிலா ஜோபியை கணவர் சேம் மரியதாஸ் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் தொட்டாபள்ளபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேம் மரியதாசை கைது செய்தனர்.
பின்னர், பிரேத பரிசோதனைக்கு பிறகு ஜெனிலா ஜோபியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊருக்கு உடலை எடுத்து வந்த உறவினர்கள், பெற்றோர் வீட்டில் புதைக்காமல், கணவரின் வீட்டின் முன்பகுதியில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, கருங்கல் திப்பிரமலை பகுதிக்கு உடலை கொண்டு சென்று, சேம் மரியதாஸின் வீட்டின் வளாகத்தில் வாசல் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. இதையறிந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
மகளின் கணவன் செய்த செயலுக்கு பழிவாங்கும் விதமாக அவருடைய வீட்டிலேயே புதுப்பெண்ணின் உடலை உறவினர்கள் புதைத்ததாக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.