மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைத்த முதல் ஆப்பு!!

619

Modi

மத்திய அமைச்சர்கள் தங்களது உறவினர்களை தனிப்பட்ட அதிகாரிகளை, அந்தரங்க செயலாளர்களாக, சிறப்பு பணி அதிகாரிகளாக நியமிப்பது வழக்கம்.

இதில் பிரதமர் தலையிடுவது இல்லை. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில், 2012-13 ஆண்டில் ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால், தனது சொந்த மருமகன் விதுல் குமாரை சிறப்பு பணி அதிகாரியாக நியமித்திருந்தார்.

அதுமட்டுமின்றி தனது சகோதரி மருமகன் ராகுல் பண்டாரியை தனது அந்தரங்க செயலாளராக நியமனம் செய்திருந்தார். தனது சகோதரி மகன் விஜய் சிங்லாவையும் அந்தரங்க செயலாளராக வைத்திருந்தார்.

இவர்களில் விஜய் சிங்லாதான் பணத்துக்கு பணி நியமனம் செய்த ஊழலில் சிக்கினார். இதில் பவன்குமார் பன்சால் தனது பதவியை பறிகொடுக்க நேர்ந்தது.

இந்த நிலையில், தற்போது பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசில் இப்படி ஒரு பிரச்சினை எழுவதற்கே வாய்ப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களுக்கு தான் கையெழுத்திட்டு ஒரு அறிவிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் எந்தவொரு அமைச்சரும் உறவினர்களை, தமது தனிப்பட்ட அதிகாரிகளாக நியமிக்க தடை விதித்துள்ளார்.

அந்த அறிவிக்கையில், அமைச்சர்கள் தங்களது தனிப்பட்ட அதிகாரிகள் நியமனத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிவிக்கையின் மிக முக்கிய அம்சம், செயலாளர்களாக, இன்ன பிற அதிகாரிகளாக பொதுத்தொகுப்பில் இருந்துதான் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என கூறி இருப்பதுதான்.

அமைச்சர்கள் தங்களது தனிப்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்வதில், பிரதமர் தலையிட்டு உத்தரவு பிறப்பித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும், அமைச்சர்கள் செலவினங்களை குறைக்க வேண்டும், மக்களுடன் நேரடி தொடர்பினை வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிப்படி, நரேந்திர மோடி ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதற்கான நடவடிக்கை இது என வர்ணிக்கப்படுகிறது.