செஞ்சியில்..
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தணிகைவேல். வெல்டிங் கடை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் நேற்று இரவு வீட்டுக்கு வராமல் இருந்தாராம்.
இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்திருக்கின்றனர். இந்த நிலையில், காரை கிராம விளையாட்டு மைதானத்தில் உள்ள வாலிபால் கம்பத்தில், தணிகைவேல் தூக்கில் தொங்கியபடி இருப்பதாக இன்று காலையில் அப்பகுதியினர் பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சம்பவ இடத்திற்குச் சென்ற செஞ்சி டி.எஸ்.பி பிரியதர்ஷினி தலைமையிலான காவல்துறையினர், தணிகைவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களை முற்றுகையிட்ட தணிகைவேலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தணிகைவேலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரைக் கொலைசெய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டி.எஸ்.பி பிரியதர்ஷினி, இது குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இளைஞரின் உடல் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது.
தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இளைஞரின் தந்தை சர்க்கரை, அனந்தபுரம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவுசெய்த போலீஸார், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.